மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளார் மு.க.ஸ்டாலின். தன்னுடைய பதிநான்கு வயதில் எழுத ஆரம்பித்தவர் கருணாநிதி. கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தவர். அவருடைய சட்டமன்ற உரைகள் மட்டுமே பன்னிரண்டு தொகுப்புகள். தன் வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதி, ஆறு பாகங்கள் அடங்கிய தொகுப்பு. கட்சியினருக்கு எழுதிய கடிதங்கள் ஐம்பத்து நான்கு தொகுப்புகள்.
இவை அனைத்தும் தமிழ் இணையைக் கல்விக் கழக இணையதளத்தில் கிடைக்கும்படி செய்திருக்கிறார்கள். கருணாநிதியின் நூல்கள் மட்டுமின்றி, அரசு நாட்டுடைமையாக்கிய மற்றவர்களின் நூல்களும் இத்தளத்தில் உள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையானது கிட்டத்தட்ட நூற்றெண்பது நூல்களை நாட்டுடைமையாக்கியுள்ளது. இதற்காகச் சுமார் பதினைந்து கோடிகளை அரசு செலவிட்டுள்ளது. இப்பணம் எழுத்தாளர்களின் வாரிசுகளுக்குத் தரப்பட்டது. எல்லாமே நல்ல விஷயங்கள்தாம்.
தமிழ்நாடு மட்டுமின்றி இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் இவை பரவும். இப்படிப் பரவ வேண்டிய எழுத்துகளில் முக்கியமானது திராவிட இயக்கத் தலைவர் ஈ.வே.ராமசாமியினுடையது. பெண் உரிமை, சுயமரியாதைக் கருத்துகளைத் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிக் குவித்தவர். மற்ற இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாமல் போவதற்கான காரணங்களில் அவருக்கு முதன்மையான பங்குண்டு. இன்றைக்கும் அவருடைய கருத்துகளுக்குத் தேவையிருக்கிறது. ஆனால், அவருடைய நூல்கள் இன்னும் நாட்டுடைமையாகவில்லை.
Add Comment