1998ஆம் ஆண்டின் மே மாதம் 11-13 தேதிகள் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானவை. இந்தியா தனது இரண்டாவது அணுஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது இந்தத் தேதிகளில்தான். ராஜஸ்தானில் உள்ள இந்திய ராணுவத்தின் சோதனைத்தளமான பொக்ரானில் சோதனை நடத்தப்பட்டது.
ஐந்து தொடர் சோதனைகள் கொண்ட இந்த நிகழ்வுக்கு இந்திய அரசாங்கம் வைத்த பெயர் ‘ஆபரேஷன் சக்தி’. இது வெற்றியடைந்ததும் இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியாவை அணுசக்தி நாடு என வெளியுலகுக்கு அறிவித்தார்.
இந்த அணுஆயுதச் சோதனை பற்றிய தகவல்களும் செய்திகளும் இந்தியாவில் பொதுமக்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டன. இந்த வெற்றியை நாடே கொண்டாடியது. சிறியளவில் விமர்சனங்கள் எழுந்தபோதும், பத்திரிகைகளும் பாராட்டின. அரசியல்ரீதியாகச் சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. காங்கிரஸ் இதனைப் பலமாக ஆட்சேபித்தது. அணுஆயுதப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசியல் நோக்கத்துக்காக இது செய்யப்பட்டுள்ளது எனப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது.















Add Comment