தமிழ்நாடு ஆளுநர் சட்டமன்றத்துக்கு வருகிறார் எனில் நிகழ்ச்சி நிரலில் அவர் வெளிநடப்பு செய்வதும் உண்டென்பது சமீப கால வழக்கமாகியுள்ளது. ஒவ்வோராண்டும் நிகழும் இந்த வெளிநடப்புக்கு இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரும் விதிவிலக்கல்ல.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் குரலெழுப்பத் தொடங்கினர். இருக்கையில் அமராமல் அவையின் மத்தியில் வந்து முழக்கம் எழுப்பினர். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளிகளை ஆளுங்கட்சி காப்பாற்ற முனைகிறதோ என்ற சந்தேகத்தை முன்வைத்து நீதிகேட்டனர்.
உள்நோக்கத்துடன் கிளம்பும் எதிர்க்கட்சியினரின் சந்தேகமா மக்கள் சந்தேகமா என்பது முக்கியமில்லை. சந்தேகம் எழுந்தால் தீர்த்து வைப்பது ஆளுங்கட்சியின் கடமை. கேள்வி எழுப்பி ஆட்சியை நடுநிலையோடு நடத்த வைப்பது எதிர்க்கட்சிகளின் கடமை. இதெல்லாம் அரங்கேறிக்கொண்டிருந்த அவையில் ஆளுநராகக் கடமையாற்றவேண்டியவர் தானும் ஒரு கோரிக்கையை எழுப்பினார். சட்டமன்றத்தில் நிகழ்வுகள் தொடங்கும் போதே தேசியகீதத்தைப் பாடவேண்டும் என்கிற மக்கள் பிரச்சினையைப் பற்றிய குரல் அவரிடமிருந்து எழுந்தது. உரை முடிந்த பிறகு இறுதியாக தேசியகீதம் பாடுவதே தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு.
Add Comment