முன்னாள் ரியல் எஸ்டேட் நிபுணரும் அமெரிக்காவின் புதிய அதிபருமான டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்ற நாளாக வெளியிட்டு வரும் அதிரடி உத்தரவுகள் அநேகம். தீவிர வலதுசாரி ஆட்சியாளர்தான் சரி என்று முடிவு செய்து அவரை ஆட்சியில் அமர்த்தியிருக்கும் அமெரிக்கர்களும் சரி; கிட்டத்தட்ட அதே மனநிலையில் தமது தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கும் பல ஐரோப்பிய நாடுகளின் மக்களும் சரி. டிரம்ப்பின் இந்தத் தீவிரத்தின் சதவீதம் தமது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள்.
சரி, அது அவர்கள் பிரச்னை; நமக்கு ஒன்றுமில்லை என்று இருந்துவிட முடியாது. பாலஸ்தீனப் பிரச்னையில் டிரம்ப் வெளியிட்டிருக்கும் சமீபத்திய கருத்து, வரலாறு காணாத அயோக்கியத்தனத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவின் நட்பு நாடுகளும் ஐக்கிய அரபு நாடுகளும் அவரது கருத்துக்கு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்ததை கவனித்தால், இந்த விவகாரத்தின் தீவிரம் புரியும்.
அவர் சொன்னதன் சாரம் இதுதான். காஸாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும். போரினால் ஏற்பட்ட இடிபாடுகளைச் சரி செய்யும். அதுவரை பாலஸ்தீனியர்கள் வேறு நாடுகளுக்குப் போய்விட வேண்டும். எல்லாம் சரியான பின்பு திரும்பி வரலாம் என்றாலும் அப்போது காஸா, அமெரிக்காவின் காலனியாகத்தான் இருக்கும். அதாவது, செய்த செலவுக்குக் கூலியாக காஸாவையே எடுத்துக்கொண்டுவிடுவார்கள்.
Add Comment