மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில் இயங்கும் பிஎம்ஶ்ரீ பள்ளிகள் திட்டத்துக்குத் தமிழ்நாட்டு அரசு உடன்படாத வரை மத்திய அரசு தன் பங்காகத் தரவேண்டிய கல்வி நிதியைத் தராது என்று பேசித் தொடங்கி வைத்தார்.
பிராந்திய மொழியும் ஆங்கிலமும் பாடத்திட்டத்தில் இருக்கும். அதனுடன் கூடுதலாக இன்னொரு மொழியைக் கற்க வேண்டும். அது வேறெந்த இந்திய மொழியாகவும் இருக்கலாம் என்று ஒப்புக்குச் சொல்வார்கள். அடிப்படை நோக்கம், அது இந்தியாக இருக்க வேண்டும் என்பதுதான்.
அமைச்சரின் பேச்சுக்கு வலுவான எதிர்ப்புகள் எழுந்தபிறகு நாங்கள் இந்தியைத் திணிக்கவில்லை, ஏதாவதொரு தென்னிந்திய மொழியைக்கூட மூன்றாவதாகக் கற்கலாம் என்று சொன்னார். கல்விக்கொள்கை அறிக்கை, ‘குழந்தைகள் வீட்டிலோ உள்ளூரிலோ பேசும் மொழியில் படிக்கும்போது எளிதாகக் கற்றுக்கொள்வார்கள்’(4.11) எனத் தொடங்குகிறது. ஆனால், அந்தப்பத்தி முடியும்போது உள்ளூர் மொழி கற்பித்தல் மொழியாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்று முடிகிறது.
பத்தி 20.20 இல் இன்னும் தெளிவாக, ‘தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு, கற்கப்படும்-கற்பிக்கப்படும் இந்திய மொழிகளுக்கு மட்டுமே நிதியுதவி அளித்து ஊக்குவிப்போம்’ என இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கும் வட இந்திய மாநிலங்களில் யாரும் தென்னிந்திய மொழிகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. சமஸ்கிருதம், உருது, பஞ்சாபி போன்ற மொழிகளே மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படுகின்றன. தென்னிந்தியாவில் இருப்போர் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் எனத் தேர்ந்தெடுத்தாலும்கூடப் பெரும்பான்மை அடிப்படையில் சில ஆண்டுகளில் கைவிடத்தான் போகிறார்கள். தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பது நாம் அறிந்ததுதானே. இதனால்தான் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் இத்திட்டத்தைத் தமிழ்நாடு எதிர்க்கிறது.
Add Comment