மார்ச் பதினெட்டாம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் சம்பள உயர்வு, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் எண்ணிக்கை அதிகரிக்க எனச் சில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஆசிரியர் சங்கம் விடுமுறைப் போராட்டம் என்று அறிவித்திருந்தது.
இம்மாதிரி அரசு ஊழியர்கள் அறிவிக்கும் போராட்டங்கள், பொதுமக்கள் ஆதரவினைப் பெற்றதாக என்றுமே செய்தி வெளியானதில்லை. அரசு மக்களுக்குச் செய்யும் நன்மைகள் அனைத்துமே அரசு ஊழியர்களின் மூலம்தான் மக்களுக்குச் செல்கின்றன. மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து சேவையாற்றி அவர்கள் நன்மதிப்பைப் பெறும் வாய்ப்பு அரசியல்வாதிகளைவிட அரசு அதிகாரிகளுக்கே அதிகம்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வந்து போகும் அரசியல்வாதி போலன்றி, பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரி மக்களில் ஒருவராக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கும், தீர்வு காணும் நபராக இருந்தால் நிச்சயம் மக்கள் அவரைக் கொண்டாடுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட அரசுப் பணியாளர்கள் அரிதானவர்களே.
ஊதியத்துக்கு ஏற்ற உழைப்பு
குறைந்த ஊதியத்தைப் பெற்று சிறப்பான கல்வியை கொடுத்த ஆசிரியர்கள் இருந்தனர். அந்த அர்ப்பணிப்பு அரசு பள்ளிகளில் இருப்பதாக தெரியவில்லை. தனியார் மருத்துவமனை பணியினைத் தவிர்த்துவிட்டு அரசு பணிக்கு வரும் மருத்துவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் அவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு முறையாக பராமரிப்பதில்லை. காவல்துறை குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் பணியின் சுமை அதிகம். வெய்யிலில், மழையில் போக்குவரத்தை சரி செய்யும் காவலர்கள் நிலை பரிதாபம். பாதுகாப்புப் பணிக்குச் செல்லும்போது சொல்லவே வேண்டாம். காவல் துறைக்கும் அவர்கள் பணிக்கேற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. மற்ற சில முக்கியமான துறைகள் இருக்கின்றன. அவை குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?
ஊதியத்துக்கு ஏற்ற உழைப்பு இருக்கிறதோ இல்லையோ லஞ்சத்திற்கு ஏற்ற உழைப்பு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த நேர்மை (?)யை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
பாபநாசம் நடராஜன்