சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதன் அறமற்ற தன்மையைச் சுட்டிக்காட்டி அம்மாநிலத்தின் முதலமைச்சர் உரையாற்றுகிறார். இந்த நாட்டில் இவ்வளவு நெஞ்சுரம் கொண்ட இன்னொரு தலைவர் யாராவது இப்போது இருக்கிறாரா என்று ஊடகங்களும் சமூக ஊடகவாசிகளும் புல்லரித்துப் போய்க் கைதட்டுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் இம்மாபெரும் ஜனநாயக நாட்டில் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய அவலம் ஏன் தொடர்கிறது என்று யாரும் சிந்திப்பதேயில்லை. தமிழ்நாட்டிலாவது அதை எடுத்துப் பேசும் அளவுக்குத் துணிவுள்ள ஒரு முதலமைச்சர் இருக்கிறார். இதர மாநிலங்களில் இப்படி ஒரு சம்பவம் நடப்பதுகூட அரிதே.
சமீபத்தில் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நிகழ்ந்ததைக் கண்டோம். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும் அம்பேத்கரின் அருமை பெருமைகளைப் பேசி, கைப்பிடி மலர் அள்ளிப் போட்டு வணங்கிவிட்டுச் சென்றதையும் கண்டோம். இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அறிஞர்களின் குழுவுக்குத் தலைமை தாங்கிய பேரறிஞர் அவர். உண்மையிலேயே அதற்குரிய மரியாதையைத் தரக்கூடிய ஒரு மத்திய அரசு இப்படித்தான் நடந்துகொள்ளுமா என்று சிறிது சிந்திக்கலாம்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தனது குடிமக்களுக்கும் மொழி வழி பிரிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கும் அளித்துள்ள உரிமைகள் அநேகம். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை. இந்நாட்டின் உறுதிப்பாடு என்பது அதன் அடிப்படையிலேயே கட்டிக்காக்கப்படுவது.
ஆனால் நடப்பது என்ன?
Add Comment