தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்திருக்கும் மழையை வரலாறு காணாத மழை என்று சொல்கிறார்கள். வானிலை மைய இயக்குநர், இப்படியொரு மழையை என் பணிக்காலத்தில் கண்டதில்லை என்கிறார். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு நாளில் பதிவான மழையின் அளவு ஓராண்டு முழுவதும் பெய்திருந்தாலும் வந்திருக்க வாய்ப்பில்லாதது என்றும் சொல்கிறார்கள். பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், எல் நினோவின் எதிர் விளைவு என்று ஒவ்வொரு திக்கிலிருந்தும் ஒரு காரணம் சீறிக் கிளம்பி வருகிறது. எதிர்பாராத வகையில் நிகழ்ந்துவிட்ட ஒரு பெரும் இயற்கை இடர் என்ற அளவில் எடுத்துக்கொள்வது தவிர நமக்கு வேறு வழியில்லை.
சமீபத்தில் சென்னை கண்ட பெருமழையின்போதும் இத்தகைய கருத்துகள் வந்தன. கருத்துகளை விடுவோம். நகரம் அந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. இக்கணம் வரையிலுமே முற்றிலுமாக நிலைமை சீரடைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. மழை நீர் வற்றிவிட்ட பகுதிகள் அனைத்திலும் உடைந்த சாலைகள் பூதாகாரமாகச் சிரிக்கின்றன. அவற்றைச் சீர் செய்ய நிச்சயமாக நெடுங்காலம் பிடிக்கும். மழையின்போது எண்ணூரில் ஒரு தொழிற்சாலையில் இருந்து வெளியேறத் தொடங்கிய எண்ணெய்க் கசிவு, நதிப்பாதை முழுவதையும் நாசமாக்கியிருக்கிறது. வழக்கு, விசாரணைகள் ஒரு புறம் இருந்தாலும் பாதிக்கப்படும் மக்களின் அவதி ஒன்றே கண்ணெதிர் உண்மை.
இதன் நீடித்த விளைவுகள் என்னவாக இருக்கும் என்று இப்போது ஊகிக்க இயலாது. ஏற்கெனவே பலர் சரும நோய்களுக்கு ஆட்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். ஓர் இயற்கைப் பேரிடர் எவ்வளவு மோசமான விளைவுகளைத் தந்துவிட்டுச் செல்லும் என்று கணிக்க இயலாது. இம்முறை நடந்திருப்பது எதிர்காலத்துக்கான மிகப்பெரிய எச்சரிக்கை.
Add Comment