தமிழ்நாட்டு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது என்பது குழந்தைகளுக்கும் தெரியும். நாளொரு அறிக்கை, பொழுதொரு சொற்பொழிவு என்று ஆளுநர் தம்மாலான அனைத்து விதங்களிலும் தமிழ்நாட்டுப் பெரும்பான்மை மக்கள் விரும்பாத விவகாரங்களைத் தொடர்ந்து பேசி வருவதும் அனைவரும் அறிந்தது. பதிலுக்கு பாரதிய ஜனதாவை ஆதரிக்காத அத்தனைக் கட்சியினரும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவரை விமரிசிப்பதும் கிண்டல் செய்வதும் தொடர்கதை ஆகிப் பல காலமாகிவிட்டது.
ஆனால் கடந்த பன்னிரண்டாம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாள் அமர்வில் ஆளுநர் உரை சார்ந்து எழுந்த சிக்கல் இந்த ரகத்திலானதல்ல. ஏனெனில் சென்ற முறையும் ஆளுநர் உரையில் சிக்கல் எழுந்தது. அரசு அளித்த உரையில் அவர் சில திருத்தங்கள் செய்து மாற்றி வாசிக்கப் போக, அவரது உரையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். அப்போது ஒரு காரணம். இப்போது வேறொரு காரணம். ஆனால் வெளிநடப்பு மட்டும் நிச்சயம்.
பொதுவாக ஆளுநர் உரை என்பது அரசின் சாதனை விளக்க உரையாகத்தான் இருக்கும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல. நாடு முழுதும் இதுதான், இப்படித்தான். அரசாங்கத்தின் சார்பாக எழுதி அனுப்பப்படும் உரையை ஆளுநர் சபையில் வாசிப்பார். அதில் அவர் மாற்றங்களோ திருத்தங்களோ பொதுவாகச் செய்வதில்லை. தமிழ்நாட்டு ஆளுநர் தொடக்கம் முதலே ஒரு செயல் திட்டத்துடன் தமது பணியைத் தொடங்கியவர் என்பதால் அவரிடம் இதனை எதிர்பார்க்கலாம், பெரிய அதிர்ச்சியில்லை.
அதே சமயம் இம்முறை அவர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்ததற்குச் சொன்ன காரணங்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.
Add Comment