2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, ரமலான் நோன்புத் தொடக்க தினத்தன்று நாடு முழுவதற்கும் பொதுவான சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய இறுதிக்கட்ட ஆயத்தங்களுள் ஒன்றாக இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் எளிதில் விளங்கக்கூடியதே.
நிறைய பேசி, நிறைய கண்டித்து, நிறைய எதிர்த்து, நிறையப் பேர் உயிரையே விட்டு ஓய்ந்த பின்னர் இன்றைக்கு இச்சட்டம் வந்திருக்கிறது. தேசம் அமைதியாக இருக்கிறது. பாபர் மசூதி இடிப்புச் சம்பவமும் இப்படித்தான். தேசமே கொதித்துக் கொந்தளித்து, ஏராளமான இழப்புகளைச் சந்தித்து ஓய்ந்த பிறகு ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து, நல்லபடியாகத் திறந்துவிட்டார்கள்.
அதுவும் இந்திய முஸ்லிம்களின் வருத்தங்களின்மீது கட்டியெழுப்பப்பட்டது; இதுவும் அதே தரப்பின் துயரங்களின் மீது எழுதப்பட்டிருக்கிறது. இம்முறை அவர்களுக்கு உடன் நின்று வருத்தப்பட ஒரு கூடுதல் தரப்பு சேர்ந்திருக்கிறது. தமிழ்நாடெங்கும் பல்லாண்டு காலமாகப் பரவி வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள். இந்தக் குடியுரிமை சட்டத் திருத்தத்தால் பயன் பெறவிருப்போர் பட்டியலில் அவர்கள் இல்லை.
Add Comment