மெட்ராஸ் பேப்பர் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த புதன் கிழமை (ஏப்ரல் 17, 2024) வெளியாகவிருப்பது நமது நூறாவது இதழ். பாரம்பரியம் மிக்க பல தமிழ்ப் பத்திரிகைகள் நலிவுற்றுப் போய்க்கொண்டிருக்கும் காலத்தில் ஒரு புதிய இணைய வார இதழை, சந்தா செலுத்தி வாசிக்க வேண்டிய இதழைத் தமிழ் வாசகர்கள் இரண்டாண்டுகளாக வாசித்து, ஊக்குவித்து, ஆதரித்து வருவது பெரிய விஷயம். மனமார்ந்த நன்றி.
இந்த இரண்டு வருடங்களில் நாம் என்ன செய்திருக்கிறோம்?
* தமிழ்ப் பத்திரிகை என்றால் தமிழ்நாட்டு விவகாரங்களை மட்டும் பேசுவதல்ல; தமிழ் பேசும் மக்கள் எங்கெல்லாம் பரவி வசிக்கிறார்களோ, அத்தனைப் பிராந்தியங்களின் பிரச்னைகளையும் பேசுகிற ஊடகமாக இது செயல்பட வேண்டுமென்று நினைத்தோம். அதைத்தான் செய்து வருகிறோம்.
* ஏராளமான புதிய தலைமுறைப் பத்திரிகையாளர்களை இந்த இரண்டு வருடங்களில் மெட்ராஸ் பேப்பர் அறிமுகப்படுத்தியிருக்கிறது. தமிழ் ஆர்வமும் எழுத்தார்வமும் கொண்டவர்கள் இவர்கள். இவர்களுள் பலர் தமிழ்நாட்டுக்கு வெளியே கடல் கடந்து எங்கெங்கோ வசிப்பவர்கள். இக்கணம் வரை ஒருவரையொருவர் நேரில் பார்த்திராதவர்களே மிகுதி. ஆனால் ஆர்வமும் அக்கறையும் உத்வேகமும் இவர்களை ஒருங்கிணைத்தது. வேறு வேறு சிந்தனைப் போக்குகள், வேறு வேறு நம்பிக்கைகள், வேறு வேறு நிலைப்பாடுகள் கொண்டவர்களாக இருந்தாலும் இந்தப் பத்திரிகையின் அகமாகவும் முகமாகவும் தம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்தவர்கள்.
* இதர தமிழ் வார இதழ்கள் பேசாத, பேச விரும்பாத எவ்வளவோ தேசிய, சர்வ தேசிய விவகாரங்களை மெட்ராஸ் பேப்பர் துணிந்து தொடர்ச்சியாகப் பேசி வந்திருக்கிறது. அரசியல், சமூகம், கல்வி, பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், பயணம், ஆன்மிகம், இலக்கியம், மொழிபெயர்ப்புகள் – இதெல்லாம் எல்லா பத்திரிகைகளிலும் எப்போதும் உள்ளவைதாம். ஆனால் மெட்ராஸ் பேப்பரில் வெளியாகும் கட்டுரைகளின், இலக்கிய ஆக்கங்களின் தரம் முற்றிலும் வேறானது என்பது முதல் முறை வாசிக்கும் வாசகர்கூட எளிதில் புரிந்துகொள்வார்.
* தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காகப் பரிந்து பேசுவோரும் கண்ணீர் உகுப்போரும் மிகுதி. ஆனால் போருக்குப் பிந்தைய இலங்கைத் தமிழர்களின் வாழ்வையும் அந்நாட்டின் அரசியலையும் அதன் விளைவான சிக்கல்களையும் தொடர்ச்சியாகப் பேசி வந்திருக்கும் ஒரே பத்திரிகை நம்முடையதே.
ஆம். நாம் கவிதைகள், சிறுகதைகளில் தீவிரம் காட்டுவதில்லை. கூடாது என்பதல்ல. உயர்ந்த தரத்தில் அவை வருவதில்லை என்பதனால் மட்டுமே. சமகாலத் திரையுலகச் செய்திகளின்பால் ஆர்வம் செலுத்துவதில்லை. ரசிக்கும் தரத்தில் அங்கே எதுவும் நடப்பதில்லை என்பதனால் மட்டுமே. போலிப் பரபரப்புகள், வதந்திகள், கணப் பொழுதில் இறந்து போகும் சுவாரசியங்களைப் பொருட்படுத்துவதில்லை. தரமற்ற இதழியல் தரக்கூடிய அற்ப சௌகரியங்களின்மீது நமக்கு ஆர்வமோ விருப்பமோ இல்லை என்பதே இதன் காரணம்.
வாசகருக்கு பாப்-அப் தொல்லைகள்கூட இருக்கக் கூடாது என்பதனால்தான் கூகுள் விளம்பரங்களைக்கூட வெளியிடுவதில்லை. நமது வாசகர்கள் செலுத்தும் மிகச் சிறிய சந்தாத் தொகை மட்டுமே இந்தப் பத்திரிகையின் தாய்ப்பால்.
நாம் எளிய தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம். மாபெரும் பத்திரிகைகளின் இணையக் கட்டமைப்பு போன்ற நுட்ப சாகச சாத்தியங்கள் நமக்குக் கிடையாது. அந்தளவு நமக்கு வசதி கிடையாது என்பது ஒன்றே காரணம். நமது சந்தாதாரர்களின் எண்ணிக்கை பெருகுமானால் மகிழ்ச்சியுடன் நாமும் அவற்றைக் கைக்கொள்ளலாம். இன்னும் சிறந்த வாசிப்பு அனுபவத்தை உங்களுக்குத் தரலாம். அது நடப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
நிற்க. மெட்ராஸ் பேப்பருக்கு சந்தா செலுத்துவதில் சிக்கல் உள்ளதாகப் பல வாசக நண்பர்கள் தொடர்ச்சியாகத் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். நமது பேமெண்ட் கேட் வேயான ‘ரேசர் பே’வின் வழியாகப் பணம் செலுத்த முடிவதில்லை; எப்போதும் எரர் மெசேஜ் காட்டுகிறது என்று பெரும்பாலானோர் சொல்லிவிட்டார்கள்.
உண்மையில் இது ரேசர் பேவின் பிரச்னை மட்டுமல்ல. கிரெடிட்/டெபிட் கார்டுகளை இணைய தளங்களில் உள்ளிடும்போது தகவல்களை சேமித்து வைக்கவா என்று கேட்பது ரேசர் பே கேட் வேயின் வழக்கம். நமது ரிசர்வ் வங்கியின் சமீபத்திய நிபந்தனைகளின் அடிப்படையில் அப்படி கார்டு தகவல்களைச் சேமித்து அடுத்தடுத்த சுழற்சியில் தானியங்கி முறையில் கட்டணம் செலுத்த E Mandate அனுமதி பெற்றிருக்க வேண்டும். ரேசர் பே நமக்கு அந்த வசதியை இன்னும் திறந்துவிடாததே, அவ்வழியில் பணம் செலுத்துவதில் பிரச்னை வரக் காரணம். ஆனால் Net Banking, UPI வழியாகப் பணம் செலுத்தலாம். ரேசர் பேவில் அம்முறைகளில் சிக்கல் இராது.
இதுவுமே இந்திய கார்டுகளுக்கு மட்டும்தான் சிக்கல். பன்னாட்டு க்ரெடிட் கார்டுகளின் வழியே பணம் செலுத்தினால் பிரச்னை வருவதில்லை.
எப்படியானாலும் இந்தப் பிரச்னை தீர இன்னும் சிறிது காலம் எடுக்கும் என்று தெரிகிறது. அதுவரை இந்தியாவுக்குள் வசிக்கும் வாசகர்கள் ரேசர் பேவின் பக்கமே செல்லாமல், நேரடியாகத் தமது மொபைல் போனில் உள்ள கூகுள் பே, பேடிஎம், பீம் போன்ற யுபிஐ செயலிகளின் மூலம் சந்தாத் தொகையைச் செலுத்தலாம். வெளிநாட்டு வாசகர்கள், பன்னாட்டு க்ரெடிட் கார்டுகளை மட்டும் பயன்படுத்தினால் ரேசர் பே பிரச்னை தராது.
இன்னொரு விஷயம். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் நூறாவது இதழில் இருந்து மெட்ராஸ் பேப்பரின் ஆண்டுச் சந்தா ஐந்நூறு (ரூ. 500 மட்டும்) ஆகிறது. சில தொழில்நுட்பக் காரணங்களால் மாதச் சந்தா வசதி நிறுத்திவைக்கப்படுகிறது. ஆயுள் சந்தாவில் (ரூ. 6000) மாற்றமில்லை.
வாசகர்கள் இந்தச் சிறிய சந்தா மாறுதலைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறோம். சந்தா செலுத்தும் வழிமுறைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன.
இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் நமது சந்தாதாரர் ஆக்குங்கள். மீண்டும் சொல்கிறோம், இது ஊர் கூடி இழுக்கும் தேர். உங்கள் ஆதரவு ஒன்றுதான் இந்தப் பத்திரிகையின் ஆதார பலம். நூறாவது இதழில் பல புதிய, சுவாரசியமான பகுதிகளுடன் மீண்டும் சந்திப்போம்.
வாசகர்களுக்கு மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
[armelse]
Add Comment