நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், விளையாட்டு – கேளிக்கை என்பதற்கு அப்பால் நமக்குச் சில செய்திகளை மௌனமாகத் தெரியப்படுத்துகின்றன. அதில் முதன்மையானது, ஒரு விளையாட்டை நாம் அதற்குரிய மதிப்பில் அணுக மறந்துகொண்டிருக்கிறோம் என்பது.
இறுதி ஆட்டம் நடந்துகொண்டிருந்தபோது இந்தியத் தரப்பில் ஆடியவர்களை ஆரவாரமாக உற்சாகப்படுத்திய ரசிகர்கள், ஆஸ்திரேலியத் தரப்பினர் எவ்வளவு நன்றாக ஆடினாலும் இறுதி ஊர்வல முகபாவத்தையே கொண்டிருந்ததைக் காண அதிர்ச்சியாக இருந்தது. முன்னர் இது இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மேட்ச் நடக்கும்போது மட்டும்தான் காணக் கிடைக்கும். இப்போது யாருடன் இந்தியா விளையாடினாலும் இதுதான் என்பது அபாயகரம்.
தொடர்ச்சியாக இந்தியா பெற்று வந்த வெற்றிகள் அளித்த களிப்பு, இறுதிப் போட்டியில் இல்லை என்றால் ஓர் ஏமாற்றம் இருக்கும். அது தவறில்லை. ஆனால் விளையாட்டின் சுவாரசியமே அதுதானே? எதிர்பாராதவற்றை எதிர்பார்க்கும் மனநிலையை நாம் முற்றிலும் இழந்துகொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.
இதனினும் பெரிய சிக்கலாக வேறொன்று உள்ளது. ஆட்டத்தைப் பார்க்கப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் வந்தது. உண்மையிலேயே அவர்கள் கிரிக்கெட் ஆர்வமுள்ளவர்கள் என்றால் சரி. கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது சேப்பாக்கத்தில் மேட்ச் நடந்தால் சென்று பார்ப்பார். ஆனால் இப்படி இறுதி அரை மணி நேரம், ஒரு மணி நேரத்துக்கல்ல. மொத்த ஆட்டத்தையும் அமர்ந்து ரசிப்பார். அது குறித்த தமது கருத்துகளையும் சொல்வார், எழுதுவார். அது வேறு.
Add Comment