வேங்கை வயல் விவகாரம் அளித்த அதிர்ச்சியே இன்னும் நினைவை விட்டு நகராத நிலையில் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் சிலர் சக (பட்டியலின) மாணவனையும் அவனது சகோதரியையும் அரிவாளால் வெட்டியிருக்கும் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. 16-17 வயது இளைஞர்களின் மனத்தில் சாதிய வன்மம் அந்தளவுக்கு ஆழமாக ஊன்றப்பட்டிருப்பதை விழிப்புடன் கூர்ந்து கவனிப்போம்.
நமது அரசியல்வாதிகள் சாதிகளைப் பொருட்படுத்தாதது போலவே பேசுவார்கள். ஆனால் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, கட்சிப் பதவி, ஆட்சிப் பதவிகள், மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள், மேயர், வாரியப் பதவிகள் உள்பட அனைத்தும் சாதி அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இதில் கட்சி பேதமே இல்லை. நாடு முழுதும் இதுதான்; அனைத்து மாநிலங்களிலும் இப்படித்தான். சாதி ஓட்டுகளை நம்பித்தான் கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. அதனாலேயே சாதித் தலைவர்கள் பிராந்தியங்களில் சக்தி மிக்கவர்களாக வலம் வருகிறார்கள். அவர்களை மையமாகக் கொண்டு சாதிப் பெருமை பேசித் திரியும் கூட்டம் ஒன்று எல்லா தலைமுறையிலும் எக்காலத்திலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அடுத்தத் தலைமுறைக்கு அதே கசடைக் கடத்தும் பொறுப்பை ஏற்றுச் செயல்படத் தொடங்குவார்கள். மேற்படி சம்பவம் இப்படி நிகழ்ந்ததுதான்.
நாம் எங்கு தவறு செய்கிறோம்?
Add Comment