2024ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகின. தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில தமிழக மாணவர்கள் மாநிலத்திற்கு வெளியே உள்ள மையங்களிலிருந்தும் தேர்வு எழுதியுள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். தேர்ச்சி பெற்ற 57 மாணவர்களில் 50 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற்றுள்ளனர். அவர்களில் 18 பேர் நான் முதல்வன் உறைவிடப் பயிற்சித் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
மார்ச் 2022 ஆம் ஆண்டு நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், பணியில் சேர்வதற்கு அவர்களைத் தயார்ப்படுத்தும் வகையில், இத்திட்டம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் கட்டணமில்லாமல் கல்லூரிப் பாடத்திட்டத்துடன் சில பயிற்சிகளும், குறைந்த கட்டணத்துடன் சில பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. மொழித்திறனை வளர்க்கும் பயிற்சிகள், மருத்துவக் குறியீட்டு முறை (Medical coding) , மேம்பட்ட தளத் தொழில்நுட்பம் (Advanced Platform Technology) உள்ளிட்ட பல பயிற்சிகள் ஆன்லைன் முறையிலும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மையங்களிலும் நடத்தப்படுகின்றன.
Add Comment