செவ்விந்தியர்கள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட ஆதி அமெரிக்கர்கள் இன்று இருக்கிறார்களா? அதே ஆதி வாசிகளாகத்தான் உள்ளார்களா அல்லது நாகரிக உலகுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு விட்டார்களா?
அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில் வசிக்கும் நவஹோ பழங்குடி இன மக்களைச் சந்திக்க முடிவு செய்தோம்.
இன்றும் தமது வலுவான கலாசாரப் பின்னணியை விட்டுக் கொடுக்காமல், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் இந்த ஆதி அமெரிக்கர்கள். அவர்களுக்கே உரிய பிரத்தியேக நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடு, வாழ்க்கை முறை எதையும் அவர்கள் நாகரிகம் கருதி மாற்றிக்கொள்ளவில்லை.
இவர்களது ஒரு சில பழக்க வழக்கங்கள் நம் இந்திய கலாசாரத்தை அடியொற்றி உள்ளதையும் கவனிக்க முடிந்தது. உதாரணத்திற்கு, சந்திர கிரகணம், சூரிய கிரகணம் இரண்டும் எப்படி இங்கே பார்க்கப்படுகிறதோ, அதே போலத்தான் நவஹோ இனத்தவர்களிடமும். கிரகணம் என்றால் நம் ஊரில் கோயில்களை மூடிவிடுவார்கள் அல்லவா? அது போலவே, இவர்களும் அன்று வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளேயேதான் இருப்பார்கள். கிரகணம் முடிந்த பிறகுதான் வெளியே வருவார்கள்.
நவஹோ பழங்குடியினரின் இன்னொரு பிரிவினரான ஹோப்பி (Hopi) இன மக்களிடையே ஒரு வினோத நம்பிக்கை உள்ளது. அவர்கள் மலைக் குன்றுகளின் மீது மட்டுமே வசிக்கிறார்கள். ஏனென்றால் என்றாவது ஒரு நாள் வேற்றுக் கிரகத் தொடர்பு தங்களுக்குக் கிடைக்கும்; அங்கே வசிக்கும் தம் முன்னோரிடம் இருந்து அழைப்பு வரும் என்கிற ஒரு நம்பிக்கை. உண்மையில் இந்த ஹோப்பிகள் வசிக்கும் பகுதியை ஹோப்பி நாடு என்றே அழைக்கிறார்கள். நவஹோ நாடால் நான்கு புறமும் சூழப்பட்ட நாடு இது (landlocked). இப்படி ஓர் இடம் அமெரிக்காவில் இருப்பதே இன்னும் நிறையப் பேருக்குத் தெரியாது…