மார்ச் 14ஆம் தேதி ஊரே ஹோலி பண்டிகையைக் கொண்டாடி முடித்திருந்த நேரத்தில் டெல்லியில் ஒரு வீட்டின் அறையில் தீ பற்றியெரியத் தொடங்கியது. தகவலின் பேரில் விரைந்து வந்தது தீயணைப்புத்துறை. தீயை அணைக்கப் போராடிக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி. காரணம் அவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்துக்கொண்டிருந்தது கட்டுக்கட்டாக பணமிருந்த நான்கைந்து சாக்கு மூட்டைகளை. அதிர்ச்சிக்கு மற்றொருகாரணமும் உண்டு. டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வசித்து வந்த வீடு அது.
விசாரணையைத் தொடங்கிய டில்லி நகரக் காவல் ஆணையர் சஞ்சய் அரோரா டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபத்யாய்க்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து விசாரிக்கத் தனது செயலாளரை சம்பவ இடத்துக்கு அனுப்பிவிட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணாவுக்கும் தகவல் தெரிவித்தார் உபத்யாய். ஆனால் பொதுவெளியில் இந்தச் செய்தி வெளியானபோது ஒரு வாரம் கடந்திருந்தது.
இதற்கிடையில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்துக்கான கணக்கு வழக்கென்ன? எரிந்த நிலையிலிருந்த பணத்தை அகற்றியது யார்? என்பது போன்ற கேள்விகள் யஷ்வந்த் வர்மாவிடமே கேட்கப்பட்டது. அது தன்னுடைய பணமே இல்லை என்கிற போது அதற்கென்ன கணக்குக் காட்ட முடியும். இப்படி ஒரு சம்பவம் நடந்தபோது வீட்டிலேயே இல்லாதபோது யார் பணத்தை அகற்றினார்கள் என்பது தனக்குத் தெரியாது எனவும் பதில் சொல்லியிருக்கிறார். அதோடு “தன் புகழுக்கு களங்கம் விளைவிக்க யாரோ செய்த சதி இது” என்று சொன்னவர் யார் என்பதையும் நாம் நொடியில் ஊகித்து விடலாம்.
Add Comment