தேர்தல் திணைக்களம் ஜனாதிபதி ரணிலுக்கு ஞாபகப்படுத்திவிட்டது. ஆம். இது இலங்கைக்குத் தேர்தல் ஆண்டு.அரசியல் சாசனப்படி நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்யும் தேர்தல் இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கும், அக்டோபர் 17ம் தேதிக்குமிடையில் நடத்தியே ஆகவேண்டும்.
இலங்கைக்கு என்று ஒரு பிரத்தியேக ராசி இருக்கிறது. வழக்கமாய்ப் புரையோடிய இனவாதமும் மதவாதமும்தான் அரசியலே என்றாலும் ஜனாதிபதித் தேர்தல் என்று வரும் போது சிங்கள அரசியல் களம் ஒரு வருடத்திற்கு முன்பே கொதிக்கத் தொடங்கிவிடும். விதவிதமான மீட்பர்களும், தேசப்பற்றுக் கோஷ்டிகளும் டமாரமடித்துக் கொண்டு வெளிக் கிளம்புவார்கள். ஒருவித அச்சவுணர்வு கட்டாயமாய்ச் சிறுபான்மை மீது திணிக்கப்படும். தேசத்தைக் காப்பாற்ற இதை விட்டால் வேறு தருணமில்லை என்று சத்தியம் செய்யப்படும். அநேகமான ஊடகங்களும் சிங்கள மேலாதிக்கவாதத் தராசு கனத்து இருக்கும் பக்கத்திற்கே நமாஸ் போட்டபடி இருக்கும். வெலவலத்துப் போகும் தமிழ், முஸ்லிம் தரப்புக்கள் எப்படியும் பவுத்த வலதுசாரித்துவப் பக்கம் நிற்காமல் எதிர்த்தரப்பு அபேட்சகருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். கடைசியில் அதுவும் இன்னொரு தேசத் துரோகமாய் மாறும்.
Add Comment