உயர்வுக்கு உடலைப் படி
அனைவருக்கும் நல்ல உடல் நலம். அதுதான் ஐக்கிய நாடுகள், உலக சுகாதார மையம் ஆகிய நிறுவனங்களின் தாரக மந்திரம். ஆனால் மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல கென்யாவிலும் தொற்றுநோய்களும் நீரில் இருந்து பிறக்கும் நோய்களுக்கும் குறைவே இல்லை.
சராசரி மனிதனின் ஆயுட்காலம் 57 வயது. ஆயிரம் பேருக்கு 300 பேர் என்ற அடிப்படையில் மக்கள் இறக்கிறார்கள். அடிப்படைத் தேவைகளைச் சரிசெய்யாமல், அறிகுறிகளை மட்டுமே நிவர்த்தி செய்வது சரியான முடிவாகாது. இதனால், அமெரிக்கா, ஐக்கிய நாடுகள், உலக சுகாதார நிறுவனம், கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியன சேர்ந்து அடிப்படைத் தேவைகளைச் சரிசெய்ய விழைந்தன. விரைந்தன.
காச நோய், ஹெ.ஐ.வி எனத் தொற்று நோய் ஒரு புறம். நீர்வழியாக வந்த காலரா மலேரியா போன்ற நோய்கள் மறுபுறம். இவற்றால் கென்யா மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு நல்ல கல்வி புகட்டுவதே நல்ல உடல்நலத்தின் அடிப்படை எனத் தெரிந்து கொண்டது உலகம். கென்யாவில் உள்ள பெண்களில் ஆர்வம் உள்ளவர்களைத் தேடிப்பிடித்து சமூக உடல்நலக் கல்வியாளர்களாகப் பயிற்சி கொடுத்தது. அவர்கள் தங்கள் சமூகத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க நிலை மாறத் தொடங்கியது.
Add Comment