துளிர்த்தொழில் தொடங்கிச் சாதித்தவர்கள் பெரும்பாலும் ஏன் ஆண்களாகவே இருக்கிறார்கள்? முப்பத்தைந்து வயதைத் தாண்டியவர்கள் தொழில் தொடங்கலாமா? தொழில்நுட்பம் தெரியாமல் இணைய வணிகச் செயலியை உருவாக்கலாமா?
இது போன்ற கேள்விகளுக்கு விடை இந்தப் பெண் நிறுவனர்.
வெண்மை களிம்பும், உதட்டுச் சாயமும், கண் மையும் என்று மட்டுமே இருந்தது இந்தியப் பெண்களுக்கான அழகுப் பொருள்கள் சந்தை. தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் இதை மாற்றியது ஒரு நிறுவனம். ‘நைகா’ என்கிற இவர்களது செயலியும், இணையச் சந்தையும் ஆண்டுக்கு ஆறாயிரம் கோடிக்கு அதிகமாக வியாபாரம் செய்கிறார்கள் என்றால் நம்ப முடியவில்லையா?
இந்தக் கதையில் இன்னொரு ஆச்சரியமும் காத்திருக்கிறது. நிறுவனத்தைத் தலைமை ஏற்று நடத்திவருவது ஒரு பெண்ணும் அவரது மகளும். நிறுவனத்தைத் தொடங்கி சுமார் பத்தாண்டுகளில் இவர்களின் குடும்ப மதிப்பு மட்டுமே இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய்.
1963ஆம் ஆண்டு மும்பையில் ஒரு குஜராத்தி குடும்பத்தில் ஃபால்குணி நாயர் (Falguni Nayar) பிறந்தார். இவரின் தந்தை, இவரின் தாயாரின் உதவியுடன் ஒரு சிறிய பியரிங்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்திவந்தார். ஃபால்குணியும் அவரின் சகோதரரும் ஆண் பெண் என்ற வேறுபாடில்லாமல் ஒரே மாதிரியாக வளர்க்கப்பட்டார்கள். உதாரணமாகத் தனது பள்ளிக் காலத்திலேயே காஷ்மீருக்குச் சென்று காஷ்மீரக் குடும்பத்தோடு தங்கிப் பழகும் அளவிற்குச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டார் ஃபால்குணி. சிறு வயதில், நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களைப் பற்றி ஏதாவது பாராட்டிப் பேச வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்வாராம் இவருடைய தந்தை. இப்படி வளர்க்கப்பட்டவர் மனத்தில் தானாகச் சாதிக்க வேண்டும் என்ற கனவு விதையாகப் பல ஆண்டுகள் இருந்து வந்ததில் வியப்பேயில்லை.
Add Comment