ஏடிஎம் எந்திரத்தில் பற்று அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். சில ஏடிஎம் டெபாசிட் எந்திரம் மூலம் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம். பெரும்பாலான இந்தியர்கள் ஏடிஎம் எந்திரத்தை இந்தளவுதான் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். இனி நியாயவிலைக் கடையில் விற்பனை செய்யும் உணவு தானியங்களை ஏடிஎம் எந்திரத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒடிசாவில் அறிமுகமாகியுள்ளது இந்தப் புதுமை.
இருபத்து நான்கு மணி நேரமும் உணவுத் தானியம் வழங்கும் தானிய ஏடிஎம் எந்திரத்தை ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ஐக்கிய நாடுகளின் உணவு வழங்கும் திட்டமும் ஒடிசா அரசும் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. ஒடிசா மாநில உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா இந்த எந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்துள்ளார். அன்னபூர்த்தி என்று பெயரிட்ட இந்தத் தானிய ஏடிஎம் எந்திரம் சில கட்ட சோதனைகள் மற்றும் மேம்படுத்தல்களுக்குப் பிறகு நாடு முழுவதும் நிர்மாணிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
‘பயனாளிகள் சரியான எடையில் அரிசி பெறுவதை இந்த அன்னபூர்த்தி தானிய ஏடிஎம் உறுதி செய்யும். எடை மோசடிகள் தவிர்க்கப்படும் என்று தானிய எந்திர இயக்கத்தைத் தொடங்கி வைத்த கிருஷ்ண சந்திர பத்ரா கூறியுள்ளார்.
இந்த அன்னபூர்த்தி தானிய ஏடிஎம் ஐந்து நிமிடங்களில் ஐம்பது கிலோ தானியங்களை விநியோகிக்கும் திறன் கொண்டது. நியாய விலைப் பொருட்கள் வழங்குவதில் 0.001% மட்டுமே பிழைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதாவது பிழைகள் ஏற்படச் சாத்தியமில்லை என்றே சொல்லிவிடலாம். ஒரு தானிய ஏடிஎம் எந்திரத்தில் இரண்டு வகையான தனியங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இப்போது இந்த ஏடிஎம் எந்திரம் அரிசி வழங்க மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.
Add Comment