87 விழா
முதல் தொகுப்பை எந்தப் பதிப்பகத்தையும் எதிர்நோக்கி இருக்காமல் எப்படித் தானே போட்டுக்கொள்கிறானோ அப்படியே வாழ்நாள் முழுக்க அவனேதான் தன் புத்தகங்களைப் பதிப்பித்துக் கொள்ளப்போகிறான் என்பது அவனுக்கு அப்போது தெரியாது. அதே போல வாழ்நாளில் தன் புத்தகத்திற்காக அவன் நடத்தப்போகிற முதலும் கடைசியுமான வெளியீட்டு விழாவும் அதுவாகவே இருக்கப்போகிறது என்பதும் அப்போது தெரிந்திருக்கவில்லை. எதிர்பார்த்ததைப் போலவோ திட்டமிட்டோ அவன் வாழ்வில் எதுவுமே நடக்கப்போவதில்லை என்பதை முன்கூட்டியே சொல்வதைப்போல அவனுடைய முதல் புத்தகம் சம்பந்தப்பட்ட எல்லாம் நடந்துகொண்டு இருந்தன.
கேகே நகர் குவார்ட்டர்ஸ் மட்டும் திரும்பக் கிடைக்காது போயிருந்தால் – சொப்பு விளையாட்டைப் போல சொற்பக் காசு மட்டும் கையில் தங்காமல் போயிருந்தால் – புத்தகம் போடுவது பற்றி அவன் கனவு கூடக் கண்டிருக்கமாட்டான். அவனாக எதையும் திட்டமிடாமல், தற்செயல் நிகழ்வுகளாய் ஒன்றைத் தொட்டு ஒன்றாக நடப்பதாகவே எல்லாம் அமைந்திருந்தாலும் ஒன்றைச் செய்யவேண்டும் என்று தோன்றிவிட்டால் அதைச் செயல்படுத்தத் தேவைக்கும் அதிகமாக மண்டையை உடைத்துக்கொண்டு திட்டமிடுவதும் அது அங்குமிங்குமாய் பிய்த்துக்கொள்வதும் இறுதியில் எப்படியோ நன்றாக அமைந்துவிடுவதுமாகவே அவன் வாழ்க்கை முழுவதுமே இருக்கப்போகிறது என்பதற்கு, அந்தப் புத்தகமும் அதன் வெளியீட்டு விழாவுமே முன்கூட்டிக் காட்டப்படுகிற உதாரணங்களாக இருக்கப்போகின்றன என்பதும் அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அதுவரையிலான அவன் வாழ்வே அப்படித்தான் இருந்திருக்கிறது என்பது அவனுக்கே சுலபமாகத் தெரிந்துவிடும். ஆனால் தன்னைத்தானே திரும்பிப் பார்த்துக்கொள்வது யாருக்கும் அப்படியொன்றும் சுலபமான காரியமில்லையே. நடந்தவைகளைப் பார்த்துக் கதைகளாக எழுத முடிந்தவனுக்கு ஒட்டுமொத்தமாய் தன் வாழ்க்கை எப்படிப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதைக் கணிக்கமுடியவில்லை. அல்லது எதைப்பற்றிய கவலையுமின்றி அந்தந்த கணத்தில் வாழ்ந்தபடி அப்படியே போய்க்கொண்டிருந்தான். என்ன இருந்தாலும் சின்ன வயதுதானே.
Add Comment