75 இருக்கேன்
பாவம். அகதிகள் எவ்வளவு பேர் வந்திருந்தாங்க?
போய்ட்டு வந்தியே. எப்படி இருந்தது எக்ஸ்பீரியன்ஸ்?
என்று ஆபீசிலும் டிரைவ் இன்னிலுமாக ஏகப்பட்ட விசாரிப்புகள். இன்னும் யாருமே வரவில்லை என்றதும் ஓரிருவரைத் தவிர அநேகமாக எல்லோருமே – வந்த முதல் அகதியே நீதான்னு சொன்னாரா நெடுமாறன் என்று கிண்டலடித்த கி.ராவைப் போலவே – சிரித்துவிட்டார்கள். சிரிக்காத ஓரிருவரும் பின்னால் சிரித்திருப்பார்கள் என்றுதான் தோன்றிற்று.
செய்ய நினைத்த காரியம் முக்கியம்; அதைச் செய்ய நினைத்தது முக்கியம். எல்லாவற்றையும் வெற்றி தோல்வியால் மட்டுமே அளக்கிற உலகில் இதையெல்லாம் யார் நினைக்க இருக்கிறார்கள். யார் என்ன நினைக்கிறார்கள் என்பதா முக்கியம். நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதல்லவா எதைவிடவும் முக்கியம்.
‘ஆண்ட்டி கூட நான் இப்படியெல்லாம் இருந்திருக்கான்னு பின்னால நீ வருத்தப்படும். எனக்கு அப்படி இல்லா. உன் நினைப்பு என்னைக்கும் எனக்கு சந்தோஷமாவே இருப்பான்’ என்று மலையாளி ஆண்ட்டி கேட்பதுபோல சொன்னது நினைவுக்கு வந்தது. நிச்சயமாக வருத்தப்படமாட்டேன் என்று அவன் சொல்லவேண்டும் என எதிர்பார்த்துக் கேட்கப்பட்டதுதான் அது என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ‘மாட்டேன்’ என்று அவன் வாயால் கேட்பதற்காகத்தான் அவர் அதைக் கேட்கிறார் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. இல்லை என்பதைச் சிரிப்பின் மூலம் சொல்லிவைத்தான்.
மனிதர்கள் எல்லோருமே இப்படி தங்களுக்கு வேண்டியதைத்தான் எதிர்பாக்கிறார்கள். வேண்டியவர்களாக இருந்தால் தோல்வியாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் இல்லாம செய்யணும்னு உனக்குத் தோணிச்சே, அது இல்லையா முக்கியம் என நோக்கத்திற்காகப் பாராட்டவும் செய்கிறார்கள். வேண்டாதவர்களாக இருக்கவேண்டும் என்றுகூட இல்லை வேண்டியவனாக இல்லாதிருந்துவிட்டாலே போதும், விழுந்தானா – நல்லா வேணும் என்று பின்னால் சிரிக்கவும் செய்கிறார்கள். நம் வேலை நமக்குப் பிடித்ததை நமக்குச் சரியென்று பட்டதை நமக்கு சந்தோஷம் தரக்கூடியதைச் செய்துகொண்டு, யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்பட்டுக்கொண்டு இருக்காமல் போய்க்கொண்டே இருப்பதுதான். நம் வாழ்க்கை நாம் வாழ்வதற்கானது. அதை அடுத்தவர்களின் அபிப்ராயத்திற்காக வாழ்வதைக் காட்டிலும் அறிவின்மை வேறில்லை.
Add Comment