அவனுக்கு என்னவோ போல இருந்தது. அசிங்கமா அவமானமா என்று இனம் புரியாத துக்கம் மேலெழுந்தது. என்ன தவறு செய்தோம். கொடுத்த வேலையை ஒழுங்காகத்தானே செய்துகொண்டு இருந்தோம். ஏன் அதற்குள் வேறு எங்கோ மாற்றவேண்டும்?
6. தூக்கி வெளிய போட்ருவேன்
‘என்ன இது’ என்றார் கஸ்தூரி பாய் மேடம் கொஞ்சம் சத்தமாக.
இதற்குமேல் கைவைக்க இனி ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு, எந்த மாற்றத்திற்கும் இடம் இல்லாமல் போய்க்கொண்டிருந்த கதையின் இறுதிப் பிரதியில் மூழ்கியிருந்தவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். எதற்கும் அசைந்து கொடுக்காமல், உருவத்திலும் நிஜமாகவே மலை போல இருக்கும் மேடமே அதிர்ச்சியடையும் அளவிற்கு அப்படி என்ன இருக்கும் அந்த பேப்பரில் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
காக்கி சீருடையில் இருந்த சிப்பாய் நீட்டிய ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, தம் கையிலிருந்த இரண்டு தாள்களையும் இவனிடம் நீட்டினார்.
வாங்கிப் படித்தான். இரண்டு மூன்றுமுறை திரும்பத் திரும்ப படித்துக்கொண்டே இருந்தான்.
பாட் என்றாள் மாலோபிகா.
முதல் மாடிக்கு மாற்றியிருக்கிறார்கள் என்றார் மேடம் ஆங்கிலத்தில்.
Add Comment