64 மொழி
அதுவரை அவன் போயிருந்த அதிகபட்ச தூரமே ஹைதராபாத்தாகத்தான் இருந்தது. அதுகூட அப்பா LTCயில், பெரியப்பா கட்டியிருந்த வீட்டின் கிருகப்பிரவேசத்திற்காக அழைத்துக்கொண்டுபோனதுதான்.
மராட்டிக்காரராக இருந்தாலும் அப்பாவுக்கும் அவனைப்போலவே இந்தி தெரியாது என்றாலும் பிறந்தது கடப்பா என்பதாலோ என்னவோ தெலுங்கு சரளமாகப் பேசவரும். இங்கிலீஷைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சம்பள கிளார்க்காக இருந்துகொண்டே பக்கம் பக்கமாக இங்கிலீஷ் எழுதக் கூடியவர். ‘ஏய் எட்டாங்கிளாஸ் வாய மூடு’ என்று அப்பா இளக்காரமாய் சொல்லும்போதெல்லாம் அம்மா தவறாமல் ஹிந்தியில் தான் ‘மத்யமா’ என்று சொல்லிக்கொள்ளத் தவறியதில்லை – அவள் ஹிந்தியில் ஒரு வார்த்தை பேசி இவன் இதுநாள் வரை கேட்டதில்லை என்பது வேறு விஷயம். படித்த ஹிந்தியெல்லாம் பாத்திரம் தேய்ப்பதிலேயே போய்விட்டதோ என்னவோ. தமிழை விட்டால் தனக்கு எதுவுமே தெரியாதே டெல்லியில் போய் என்ன செய்வோம் என்கிற கவலையைக் கலக்கமாக்கிவிட்டதே திலீப்தான்.
ஹாக்கி பிளேயரான அவன்தான், ‘உனக்கு ஹிந்தி… தெரியாதா…, சுத்தம். ஹிந்தி தெரியாம டெல்லிலபோய் என்ன பண்ணுவே. அவிங்கிளுக்கு ‘இங்கிலீஷ்’னாலே என்னனு தெரியாதே. அங்ரேசினு சொன்னாதான அதுவே புரியும்’ என்று சொல்லிச் சிரித்து, ஒரு கதையை வேறு சொல்லி, ‘நீ செத்தே போ’ என்று ஒரேடியாகக் கலவரப்படுத்திவிட்டான்.
Add Comment