ஃபூல்பூர் எம்.பி.
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் நேருவுக்கு இணையாகச் சூறாவளிப் பிரச்சாரம் செய்தவர்கள் வேறு யாருமில்லை. இந்தத் தேர்தலில் நேரு அலகாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபூல்பூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் பிரபு தத் பிரம்மச்சாரி என்பவர் “பது பாதுகாப்பு இயக்கம்” சார்பில் போட்டியிட்டார். பிரபு தத் பிரம்மச்சாரி பத்தாண்டுகளுக்கு முன்பே மௌன விரதம் பூண்டவர் என்பதால், அவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசவில்லை. அவருக்கு ஆதரவாக ஏராளமான சாதுக்கள் பஜனை நிகழ்ச்சிகள் மூலமாக வாக்கு சேகரித்தார்கள். அவர்கள் நேரு, மக்களின் இந்துக்களின் மத உணர்வுகளில் வீணாக தலையிடுகிறார். அவர் கொண்டு வந்திருக்கும் “இந்துமதக் கோட்பாடுகள் புனரமைப்பு மசோதா” இந்துக்களுக்கு எதிரானது என்று பிரச்சாரம் செய்தார்கள்.
ஃபூல்பூர் தொகுதியில் நேரு சார்பாக தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து, மேற்பார்வையிட்டவர் இந்திராகாந்திதான். தொழிலதிபர் சாராபாய் குடும்பத்தைச் சேர்ந்த மிருதுளா சாராபாய் இந்திராவுக்கு உதவியாக இருந்தார்.மேலும், தேர்தல் பணியாற்ற டெல்லியிலிருந்தும், காஷ்மீரிலிருந்தும் நூறு காங்கிரஸ் தொண்டர்கள் வந்திருந்தார்கள். நேரு நாடெங்கும் பிரச்சாரச் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட வேளையில் அவர்கள் தொகுதி முழுக்கப் பம்பரமாகச் சுழன்று நேருவுக்காக வாக்குச் சேகரித்தார்கள்.
தேர்தல் முடிவுகளை நாடே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஃபூல்பூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடந்த அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தார்கள். தேர்தல் முடிவு எதிர்பார்த்தபடிதான் இருந்தது என்றாலும் மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்கள். “நேருஜி வாழ்க!” என்று கோஷங்கள் எழுப்பினார்கள். நேரு வெற்றி பெற்ற தகவல், அவருக்கு டெலிபோன் மூலமாகத் தெரிவிக்கப்பட்டது.
Add Comment