113 இணைப்பு மொழி
மேற்கத்திய நாகரிகத் தாக்கம் மிகுந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், பள்ளிப் படிப்புக்கே இங்கிலாந்து சென்றவர் என்ற போதிலும், பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கவில்லை; மாறாக, இந்தி மொழிக்கும், இதர இந்திய மொழிகளுக்கும் உரிய மரியாதையை கொடுப்பவராகவே விளங்கினார்.
மொழிகளைப் பொறுத்தவரை நேரு இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளின் ஆர்வலர் என்றே சொல்ல வேண்டும். “நான் இந்தி என்று சொன்னால், அதற்கு இந்திய மொழிகள் என்றே பொருள் கொள்ள வேண்டும்” என்று நேருவே ஒருமுறை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மொழிகள் தொடர்பாக நாட்டில் மோதல்கள் நிகழ்வதை அவர் அறவே வெறுத்தார். ஃப்ரான்க் ஆன்டனி என்ற எம்.பி. ஆங்கிலத்தையும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, பிரதமர் அதைப் பற்றிப் பேசினார்.
கடந்த காலங்களில் இந்தியா மீது ஆங்கில மொழி திணிக்கப்பட்டது. அறிவு என்ற கதவின் மூலமாக நம் நாட்டின் உள்ளே வந்த ஆங்கிலம் நமது மொழிகள் மீதும், கலாச்சாரப் பாரம்பரியத்தின் மீதும் அமர்ந்துகொண்டது. ஆங்கில மொழியை இந்தி மூலமாக விரட்டியடிக்க நாம் முயலவேண்டும். ஆனால் அதனை ஆக்கபூர்வமான முறையிலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இன்றியும் அணுகவேண்டும் என்பதே எனது கருத்து. அதே சமயம் ஆங்கிலத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் அமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்ப்பதன் மூலமாக, ஆங்கிலத்தையும் ஒரு தாய் மொழியாகவே நாம் ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்றால் அது மிகை இல்லை.
இப்படிச் சொன்ன நேரு, தென்னிந்தியர்களுக்கு இந்தியின் மீது ஒருவித வெறுப்பு இருப்பதையும் புரிந்துகொள்ளத் தவறவில்லை. அது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
Add Comment