163. மேல் முறையீடு
அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு ராஜீவ் காந்தி மூலமாக இந்திரா காந்திக்குத் தெரிவிக்கப்பட்டபோது சஞ்சய் காந்தி மாருதி கார் தொழிற்சாலையில் இருந்தார். மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தபோதுதான் அவருக்கு விஷயமே தெரியும். நேராகத் தன் அம்மாவின் அறைக்குச் சென்று, ‘உங்களைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம் சுயநலவாதிகள்! எது என்னவானாலும் நீங்கள் ராஜினாமா செய்யும் பேச்சே வேண்டாம்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
தீர்ப்பு வந்த நாளன்று மாலை. இந்திரா காந்தியின் இல்லத்துக்கு வெளியில் சில ஆயிரம் பேர் கூடி இருந்தார்கள். அவர்கள் மத்தியில் இந்திரா காந்தி பேசினார். சாமர்த்தியமாக, ராஜினாமா விஷயத்தை மட்டும் விட்டுவிட்டு, ‘இதுவரை உங்களுக்குப் பணி செய்துகொண்டிருந்த நான் வரும் நாட்களிலும் தொடர்ந்து உங்களுக்காகப் பணியாற்றுவேன்’ என்பதே அவரது பேச்சின் சாராம்சமாக இருந்தது.
காரணம், அப்போது அவர் தனது ராஜினாமா பற்றி இறுதி முடிவு எடுக்கவில்லை.














Add Comment