86. ராட்கிளிஃப்பின் சூழ்ச்சி
இந்தியாவைக் கூறுபோட்டுப் பாகிஸ்தானை உருவாக்கினாலும், இரு தேசங்களுக்கும் மவுண்ட் பேட்டன் பிரபுவே கவர்னர் ஜெனரலாக இருப்பார் என்பதுதான் பிரிட்டிஷாரின் திட்டம். மவுண்ட் பேட்டனை் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஜின்னாவோ இதுகுறித்த தன் எண்ணத்தை வெளியிடாமல் மௌனம் காத்தார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சுமார் ஒரு மாதம் வாய் திறக்காமல் இருந்தவர், ஜூலை 2-ம் தேதி, தான் எத்தனை சுயநலவாதி என்பதை வெளிப்படுத்தினார்.
பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் பதவியைத் தானே ஏற்கப் போவதாக மவுண்ட் பேட்டனிடம் தெரிவித்தார். அதேசமயம் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக மவுண்ட்பேட்டன்தான் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறினார்.
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெறும் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு டொமினியன்களுக்கும் பொதுவான கவர்னர் ஜெனரல் இருக்கவேண்டும் என்று முத்தரப்பினரும் ஏற்கனவே முடிவு செய்த, ஒப்புக்கொண்ட நிலைப்பாட்டினைப் புறந்தள்ளிவிட்டு, தானே பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் நாற்காலியைப் பற்றிக் கொண்டார் ஜின்னா.
Add Comment