49. சைமன் கமிஷன்
மோதிலால் நேருவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தவும், அவரது ஸ்வராஜ் கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையிலும் டாக்டர் அன்சாரி, விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிடுதைத் தடுப்பதற்கு காந்திஜி எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. ஆனாலும், காந்திஜி, “நீங்கள் கவலைப்படாமல், ஐரோப்பா புறப்பட்டுச் செல்லுங்கள்! இங்கே என்ன பிரச்னையானாலும், நான் பார்த்துக் கொள்கிறேன்! வரும்போது, ஜவஹரையும், கமலாவையும் பத்திரமாக அழைத்துக் கொண்டு வாருங்கள்! அது போதும்!” என்று சொல்லி, அனுப்பி வைத்தார்.
ஆகஸ்ட் மாதக் கடைசியில் மோதிலால் நேரு வெனிசுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜவஹர்லால் நேருவும், உடல் நலம் தேறிய கமலா நேருவும் அவரை வரவேற்க வெனிஸ் நகரத்தில் காத்திருந்தனர். சிறுமி இந்திராவை சுவிட்சர்லாந்தில் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருந்ததால், அவர் உடன் வரவில்லை.
அனைவருமாக இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி என்று ஐரோப்பாவில் பெரிய டூர் அடித்தார்கள். பெரிய ஹோட்டல்களில் வசதியாகச் சொகுசு அறைகள் எடுத்துத் தங்கினார்கள். எல்லா ஓட்டல்களிலும் அவர்களுக்கு ராஜோபசாரம்தான்!
Add Comment