93. ராஜாதி ராஜ ராஜ கம்பீர….
மன்னர் மானியத்தின் ரிஷிமூலம் என்ன தெரியுமா?
அந்தந்த சமஸ்தானங்களின் ஆட்சியாளர்கள் தங்கள் சமஸ்தானங்களின் வருவாயில் கணிசமான பங்கினைத் தங்களது ராஜபோக வாழ்க்கைக்குத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள். அது குட்டி சமஸ்தானமானாலும் சரி; பெரிய மகாராஜாவின் சமஸ்தானமாக இருந்தாலும் சரி!
அந்தக் காலத்தில் சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம் எனப் பெயர் பெற்றிருந்த பிரிட்டிஷ் மன்னர் ஜார்ஜ்ஜின் ஆண்டு வருமானம் சுமார் நாலரை லட்சம் பவுண்டுதான். ஆனால், இங்கே ஹைதராபாத் நிஜாம் ஆண்டுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் வருமானத்தில் சுகபோகமாக வாழ்ந்தார்.
ஒருசமயம் காந்திஜி இந்திய மக்களின் ஏழ்மையைப் பற்றிக் குறிப்பிடும்போது, நம் வைஸ்ராயின் சம்பளம் இந்தியாவில் ஒருவரது சராசரி வருமானத்தைப் போல ஐயாயிரம் மடங்கு என்று சொன்னார். ஆனால், நிஜாமின் வருமானம் இந்தியாவின் சாமானியரது வருமானத்தைப் போல சுமார் ஒரு லட்சம் மடங்கு. பிக்கானீர் சமஸ்தானத்தின் மொத்த வருமானம் 125 லட்சம் ரூபாய். இதில் நிர்வாகச் செலவுக்கும், ராணுவச் செலவுக்குமாக சுமார் 60 லட்சம் போக மீதியில் அவரது சொந்த வாழ்க்கைக்கு செலவு செய்தது 55 லட்சம் ரூபாய்.
அந்தக் காலத்தில், பிரிட்டிஷ் மன்னர் தனது தேசத்தின் வருமானத்தில் 1600ல் ஒரு பங்குதான் தனக்கு எடுத்துக் கொண்டார். பெல்ஜியம் மன்னர் 1000ல் ஒரு பங்கு எடுத்துக் கொண்டார். இத்தாலிய மன்னர் எடுத்துக் கொண்டது 700ல் ஒரு பங்கு.
Add Comment