105. படேலின் இறுதி நாட்கள்
“கட்சியிலும், ஆட்சியிலும் உள்ள எனது சகாக்களே எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால் எங்கோ, ஏதோ தவறு இருப்பதாகத்தான் அர்த்தம்.. நான் இந்தப் பதவிக்கு ஏற்ற அளவுக்குத் தகுதி பெற்ற பெரிய மனிதன் அல்ல போலும்! வெளியுலகுக்கும் ஓரளவு உள்நாட்டுக்கும் கூட நான் துணிக்கடை பொம்மை மாதிரி அலங்காரமாக நிற்க வேண்டும் என்று கருதுகிறார்கள்போல. நின்ற இடத்தில் அசையாதிருக்க வேண்டும்; நாட்டு நிர்வாகத்தின் மெய்யான காரியங்களில் அதிகம் தலையிடாது ஒதுங்கியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?” என வேதனைப்பட்டு ராஜாஜிக்குக் கடிதம் எழுதினார் நேரு.
அதே நேரத்தில் படேலிடமிருந்தும் ராஜாஜிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவர், ஜவாஹர்லாலின் மனச்சோர்வை நீக்க வேண்டும் என்றே தான் விரும்புவதாகவும், ராஜாஜியின் அறிவுரைப்படிதான் அவர் நடந்து கொண்டிருப்பதாகவும், நேரு இந்த விஷயத்தை உணர்ச்சி வசப்படாமலும் அறிவுப்பூர்வமாகவும் அணுகுவார் என்றே நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நேரு – படேல் மோதல் நீறு பூத்த நெருப்பாகத்தான் இருந்தது.
Add Comment