‘ஓபிஎஸ் பரபரப்பு பிரஸ்மீட்’ என்ற செய்திக்கு ஒரு காலத்தில் மதிப்பிருந்தது. இப்போதும் அத்தகைய செய்திகள் வருகின்றன. ஆனால். அதற்கான முக்கியத்துவம் குறைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவால் அதிமுகவின் இன்னொரு முதலமைச்சராக அடையாளம் காட்டப்பட்டு, குறைவில்லாத செல்வாக்கோடு வலம் வந்த ஓபிஎஸ்ஸின் அரசியல் கிட்டத்தட்ட அந்திம காலத்துக்கு வந்துவிட்டது. ஈபிஎஸ் என்றொருவர் அதிமுகவில் இருக்கிறார் என மக்கள் தெரிந்துகொள்வதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஓபிஎஸ்ஸின் பெயர் தமிழக மக்களுக்குப் பரிச்சயமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஓபிஎஸ்ஸின் இடம் காணாமல் போனதற்கு ஈபிஎஸ் முழுமுதற் காரணமாக இருக்கிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் என்னும் சிறு நகரத்தில் தேநீர் கடையை நடத்தி வந்தவர் ஓபிஎஸ். 1996 முதல் 2001 வரை பெரியகுளம் நகராட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் தண்டனை அறிவித்த பிறகு, ஒரே இரவில் தமிழகத்தின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார் ஓ. பன்னீர் செல்வம். அன்றைய ஊடகவியலாளர்களே யார் இந்த ஓபிஎஸ் எனக் கண்டுபிடிக்கத் திணறிப்போனார்கள். 2014ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா தண்டனை பெற்றபோது இரண்டாவது முறையாகக் கண்ணீர் மல்கத் தமிழக முதல்வரானார். ஜெயலலிதா இறப்புக்குப் பின்னரும் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.















Add Comment