அண்ணாநகர் டவரில் ஏறினால் பதினாறு நிமிடங்களில் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கிவிடலாம். இருநூறு ரூபாய் செலவழித்து ஆட்டோ அமர்த்தினால்கூட இத்தனை சீக்கிரத்தில் போய்ச் சேர முடியாது. அதனால் மெட்ரோவில்தான் தினசரி அலுவலகப் பயணம்.
உட்கார இடம் கிடைத்தால் புத்தகம் படித்துக்கொண்டு போகலாம். கம்பியைப் பிடித்துக்கொண்டே கிண்டிலில் குடும்ப நாவல் படிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். ஏசியில் அலுங்காமல் குலுங்காமல் போவதால், படிப்பது அத்தனை சிரமமாக இருக்காது. பெரும்பாலானோர் காதில் இயர்ஃபோன் மாட்டிக்கொண்டு ஸ்பாட்டிஃபையிலோ, இன்ஸ்டாவிலோ மூழ்கியிருப்பதால் ஒலி மாசும் கிடையாது.
சென்ட்ரல் மெட்ரோவில் இறங்கி, கீழ்த்தளத்தில் நிற்கும் வண்ணாரப்பேட்டை வண்டியைப் பிடிக்க வேண்டும். அங்கு மொத்தம் நான்கு நடைமேடைகள் (பெரும்பாலான ஸ்டேஷன்களில் இரண்டுதான் இருக்கும்). நான்கு வண்டிகளின் பயணியரும் குறுக்கும் நெடுக்குமாக, எக்ஸ்க்யூஸ்மீ, ஸாரி என்றெல்லாம் ஒப்புக்குக்கூட சொல்ல முடியாத அவசரத்தில் பையை வைத்து இடித்துத் தள்ளி விரைந்து கொண்டிருப்பார்கள்.















Add Comment