யோம் – இ – தக்பீர் (Youm – E – Takbeer) என்றால் என்னவென்று தெரியுமா? உருது மொழியில் இதற்கு “பெருமைமிகு நாள்” (The Day of Greatness) என்று அர்த்தம். பாகிஸ்தானியர்களுக்கு மே 28ஆம் நாள்தான் யோம் – இ – தக்பீர். ஏனெனில் 1998ஆம் ஆண்டு அந்நாளில்தான் அணு ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதாக அறிவித்தது பாகிஸ்தான். அதன் மூலம் அணு ஆயுதத் திறன் கொண்ட உலகின் ஏழாவது நாடாக ஆனது.
பாகிஸ்தானில் ஆள்வோரும் ஆளப்படுவோரும் எவ்வித முரண்பாடும் இன்றி பெருமையுடன் கொண்டாடும் ஒரே விஷயம் அந்நாட்டின் அணுசக்தி திட்டமும் திறனும்தாம். அது இந்திய எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.
வெவ்வேறு காலக்கட்டங்களில் பாகிஸ்தானின் அமைச்சர், பிரதமர், அதிபர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஜுல்பிகர் அலி பூட்டோ வெறியோடு சொன்ன புகழ் மிக்க வார்த்தைகள் இவை: “(இந்தியா அணுகுண்டு செய்தால்) நாங்கள் புல்லை, இலைகளைக் கூடத் தின்போம், பட்டினியாகவும் இருப்போம், ஆனால் எங்களுக்கான ஒன்றை (அணுகுண்டை) அடைந்தே தீருவோம், எங்களுக்கு வேறு வழியில்லை”.
விடுதலைக்குப் பின் இந்தியா மீது தொடுத்த எந்தப் போரிலும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி கிட்டாத வேதனையில் இருந்தது பாகிஸ்தான். 1971ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானை இழந்தப் பிறகு அது ஆத்திரமாக உருவெடுத்தது. ஆகவே அந்நாட்டின் அணுசக்தி திட்டங்கள் வேகமெடுக்கத் தொடங்கின. இந்தியாவிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, முக்கியமாக இந்தியாவைத் தோற்கடிக்க, அணு ஆயுதங்கள் அவசியம் என்ற முடிவுக்கு வந்தது பாகிஸ்தான்.















Add Comment