11. மேலும் சில பழக்கங்கள்
சம்பளம், கும்பளம் தொடர்பான பழக்கங்கள் தொடர்கின்றன.
4. வருமான வரி திரும்பக் கிடைக்குமா?
ஒரு நாட்டில் உள்ள குடிமக்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும், அரசாங்கத்துக்குத் தெரியாது. அதனால், நிதி ஆண்டு முடிந்தபிறகு, அந்தக் குடிமக்கள் தாங்களே முன்வந்து பின்வரும் விவரங்களை வருமான வரித்துறைக்குச் சொல்லவேண்டும்:
A => சென்ற ஆண்டில் நான் இந்த வகைகளில் இவ்வளவு சம்பாதித்தேன் (எடுத்துக்காட்டாக: சம்பளம், வாடகை, வட்டி, சொந்தத் தொழிலில் வந்த லாபம், சொத்துகளை விற்றதன்மூலம் கிடைத்த லாபம் போன்றவை)
B => அதே ஆண்டில் நான் வரியைச் சேமிப்பதற்காக இந்தச் செலவுகள், முதலீடுகளைச் செய்துள்ளேன். அத்துடன், நான் இந்த வரிவிலக்குகளுக்குத் தகுதிபெறுகிறேன்.
C => மேலுள்ள Aயிலிருந்து Bஐக் கழித்தபிறகு மீதியுள்ள தொகை இவ்வளவு. இதற்குத்தான் நான் வருமான வரி செலுத்தவேண்டும்
D => இப்போதைய வருமான வரிச் சட்டங்களின்படி, C என்கிற தொகைக்கு நான் செலுத்தவேண்டிய வருமான வரி இவ்வளவு
E => சென்ற ஆண்டில் நான் ஏற்கெனவே செலுத்தியுள்ள வருமான வரி இவ்வளவு
இங்கு D, E ஆகிய இரண்டும் ஒரே எண்ணாக இருந்தால், நீங்கள் சரியாக வருமான வரி செலுத்திவிட்டீர்கள். அதாவது, அரசாங்கம் உங்களுக்கு எதுவும் தரவேண்டியதில்லை, நீங்கள் அரசாங்கத்துக்கு எதுவும் தரவேண்டியதில்லை.
ஒருவேளை, Eஐவிட D பெரிதாக இருந்தால், அதாவது, நீங்கள் செலுத்திய வருமான வரியைவிட நீங்கள் செலுத்தவேண்டிய வருமான வரி கூடுதலாக இருந்தால், துண்டு விழும் தொகையை (அதாவது, Dயிலிருந்து Eஐக் கழித்தபின் வரும் தொகையை) இப்போது செலுத்தவேண்டும், அதுவும் வட்டியுடன்.
ஒருவேளை, Dஐவிட E பெரிதாக இருந்தால், அதாவது, நீங்கள் செலுத்தவேண்டிய வருமான வரியைவிடக் கூடுதலாக வருமான வரி செலுத்தியிருந்தால், அந்தக் கூடுதல் தொகையை அரசாங்கம் உங்களுக்குத் திரும்பக் கொடுக்கும். இதை Income Tax Refund என்பார்கள்.
Add Comment