37. சலுகை வலைகள், சமாளிக்கும் வழிகள்
குளிர் மிகுதியாக உள்ள நாட்களில் நாம் தடிமனான சட்டை போடுகிறோம். சில மாதங்களுக்குப்பின் குளிர் குறைந்து வெய்யில் கூடிவிட்டால், மெலிதான அரைக்கை சட்டைகளுக்கு மாறுகிறோம். அதேபோல், அலுவலகத்துக்கு அணிகிற சட்டை வேறு, நண்பர்களோடு கொண்டாட்டம் என்றால் இன்னொரு சட்டை, ஏதாவது திருமண விழாவில் கலந்துகொள்கிறோம் அல்லது கோயிலுக்குச் செல்கிறோம் என்றால் வேறொரு சட்டை.
இப்படிச் சூழலைப் பொறுத்து உடையைத் தீர்மானிப்பதுபோல்தான் கடன் அட்டைகளும். நம்முடைய பயன்பாடு என்ன என்பதுதான் நமக்கு எப்படிப்பட்ட கடன் அட்டை(கள்) தேவை என்பதைத் தீர்மானிக்கிறது.
எடுத்துக்காட்டாக, ஒருவர் வீட்டில் இரண்டு கார்களும் ஒரு பைக்கும் இருக்கிறது என்றால், அவருக்கு மாதந்தோறும் பெட்ரோல் செலவு பல ஆயிரங்கள் இருக்கும். அதனால், பெட்ரோல் செலவில் பணத்தை மிச்சம் செய்யக்கூடிய ஒரு கடன் அட்டையை அவர் தேர்ந்தெடுத்து வாங்குவார்.
இன்னொருவர் ஒரே ஒரு கார்தான் வைத்திருக்கிறார். ஆனால் அதையும் எப்போதாவது குடும்பத்தோடு வெளியில் செல்லும்போதுதான் எடுக்கிறார். மற்ற நாட்களில் பொதுப் போக்குவரத்தைத்தான் பயன்படுத்துகிறார். இவர் அந்தக் கடன் அட்டையை வாங்கினால் அதன்மூலம் பெரிதாக எந்தப் பயனும் இருக்காது.
இதேபோல், அடிக்கடி வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ பறக்கிறவர்கள், நட்சத்திர விடுதிகளில் தங்குகிறவர்கள், பெரிய உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுகிறவர்கள், நிறைய உடைகளை வாங்குகிறவர்கள், இணையத்தில் ஏகப்பட்ட பொருட்களை வாங்கிக் குவிக்கிறவர்கள் என்று வெவ்வேறு வகை மனிதர்களுக்கு வெவ்வேறு வகைக் கடன் அட்டை பயனுள்ளதாக இருக்கும்.
Add Comment