46. பொன் விளைச்சல்
செழிப்பான விவசாய நிலங்களைப் ‘பொன் விளைகிற பூமி’ என்பார்கள்.
தங்கம் செடியில் காய்ப்பதில்லை. ஆனால், வயலில் விளைகின்ற நெல்லையோ மற்ற தானியங்கள், காய்கறிகள், பழங்களையோ விற்றுப் பணம் சம்பாதிக்கலாம், அந்தப் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கிச் சேமிக்கலாம். இப்படித்தான் அன்றைய உலகத்தின் சிந்தனை இருந்தது.
அரசர் தொடங்கி ஏழைப் பொதுமக்கள்வரை எல்லாருக்கும் தங்கத்தின்மீது ஆசை இருந்திருக்கிறது. உடலில் நகைகளாக அணிந்துகொள்கிற தங்கம் ஒருபுறமிருக்க, பெட்டிக்குள் பூட்டிவைக்கும் தங்கமும் செல்வத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது. ஏதாவது திடீர்ச் செலவு என்றால் அந்தத் தங்கத்தை அடகு வைத்துக் கடன் பெறுவார்கள். பின்னர் அதைத் திருப்பிச் செலுத்தித் தங்கத்தை மீட்டுப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள்.
தங்கம் என்பது வளத்தின் குறியீடாக, ஒருவருடைய பெருமைக்குரிய சொத்தாக இருப்பதால்தான் குழந்தைகளைக்கூடத் ‘தங்கமே’ என்று கொஞ்சுகிறோம், திருமணத்துக்கு மாப்பிள்ளை, பெண் தேடும்போது, ‘பையன் தங்கம்மாதிரி’ என்கிறோம், வரலாற்றின் சிறப்பான பகுதிகளைப் ‘பொற்காலம்’ என்கிறோம்.
Add Comment