தமிழகக் காவல்துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்ற டிஜிபியின் அறிக்கையை ஏற்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், தனக்கும் கோவில் நிலத்துக்கும் பாதுகாப்பு வழங்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். காவல்துறை தரப்பில், தனிநபர்களுக்குப் பாதுகாப்பளிக்கப் போதிய காவலர்கள் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர், காவலர்கள் ஆர்டர்லிகளாகப் பணியாற்றுவது குறித்துக் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என டிஜிபி தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இன்னும் பல அதிகாரிகளின் வீடுகளில் காவலர்கள் வீட்டு வேலை செய்வதாகச் செய்திகள் வருகின்றன. உண்மை நிலவரம் நீதிமன்றத்திற்குத் தெரியும்’ என்று கூறி டிஜிபியின் அறிக்கையை நிராகரித்தனர்.
ஆர்டர்லி முறையை ஒழிப்பது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள, அதன் தொடக்கத்தை அறிவது அவசியமாகும். இது வெறும் நிர்வாகச் சிக்கல் அல்ல. மாறாக, அதிகாரப் படிநிலைகளில் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு மனநிலையின் வெளிப்பாடு.















Add Comment