மக்கள் நெரிசலில் திணறும் பாண்டி பஜார் தற்போது அயலக மங்கை போல் நவநாகரிக அவதாரம் எடுத்திருக்கிறது. அழகுபடுத்தப்பட்ட செல்வச் சீமாட்டி போல் இருக்கிறது. காரணம் சாலையின் இருமருங்கிலும் உயிர்ப்போடு இருக்கும் பெரிய பெரிய மரங்களும், அதையொட்டிய அகன்ற நடை பாதையும்தான். அங்கிருந்த கடைகளை அகற்றிவிட்டு அமர்வதற்காக அழகான திண்டுகளும், நடுவில் சாண்டா கிளாஸ் அமர்ந்திருக்க இருபுறமும் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் போல் பெஞ்ச்களும் போடப்பட்டிருப்பதால் சாலை இன்னும் அழகு காட்டி மக்களை ஈர்க்கிறது. இது சென்னை என்பதற்கான சிறு தடயமும் இல்லாமல் முற்றிலும் ஓர் அந்நியப் பிரதேசத்திற்குள் நுழைந்ததுபோல் நம்மை மகிழ்வித்து அனுப்பக் காத்திருக்கிறது பாண்டி பஜார்.
இந்த அழகுப்படுத்தும் பணியில் நடைபாதை வியாபாரிகள் அப்புறப்படுத்தப்பட்டு ஒரு கட்டடத்திற்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முதலில் அவர்களைப் பார்த்துவிட்டு செல்வந்தர்களுக்கு வருவோம்.
பாண்டி பஜாரின் மிக முக்கிய தொன்மையான அடையாளங்களுள் ஒன்றான நாயுடு ஹாலின் எதிரில்தான் சென்னை மாநகராட்சி இவர்களுக்கான வணிக வளாகத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. பூக்கடைகள் தங்கள் மாலைகளால் கட்டடத்தை அலங்கரித்து ‘உள்ளே வாருங்கள்’ என்று அழைக்கிறார்கள்.














Add Comment