சொல், செய்து முடி
வெற்றிக்குத் திறமை மட்டும் போதாது. நம்பகத்தன்மையும் வேண்டும். சொன்னதைச் சொன்ன நேரத்தில் செய்வதே நம்பகத்தன்மை. இந்தப் பணியை இன்னாரிடம் கொடுத்தால் முடிந்துவிடும் என்று பிறர் நம்ப வேண்டும். அந்தப் பெயர் சந்தையில் நிலைக்க வேண்டும். அது ஒரே நாளில் வருவதில்லை. ஒவ்வொரு சிறு வாக்குறுதியையும் காப்பதால் மெல்ல வளரும்.
ஒப்புக்கொள்ளும் முன் யோசிப்பதே முதல் படி. புதிய வேலை வரும்போது உடனே ஆமாம் சொல்லத் தோன்றும். வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்ற எண்ணம் வரும். ஆனால் முதலில் நம் கையில் உள்ள பணிகளைப் பார்க்கலாம். அவற்றின் அளவையும் வீரியத்தையும் ஒப்புநோக்கலாம். புதிய பணிக்கு நேரம் இருக்கிறதா என்று கணக்கிடலாம். பல பணிகளை ஒரே நேரத்தில் ஒப்புக்கொண்டால் எதையும் முழுமையாகச் செய்ய முடியாது. எல்லாம் பாதியில் நிற்கும். குறைவாக ஒப்புக்கொண்டு நிறைவாகச் செய்வதே நல்லது.
நல்ல முன்னேற்றம் தரும் வாய்ப்பு வரலாம். ஆனால் நம்மிடம் நேரம் இல்லாமல் இருக்கலாம். அப்போது உண்மையை வெளிப்படையாகச் சொல்லலாம். இந்தத் திட்டம் நமக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். இப்போது ஒப்புக்கொண்டால் குறித்த நேரத்தில் முடிக்க இயலாமல் போகலாம் என்றும் சொல்லலாம். நம்மால் அவர்களுக்கு நட்டம் ஏற்படுவதை விரும்பவில்லை என்று விளக்கலாம்.











Add Comment