எத்தனை ஆண்டுகள் என்று எண்ணிச் சொல்ல யாருமில்லாக் காலம் தொட்டு அந்தப் பேய் வசித்துக்கொண்டிருந்தது. அது பேய்ப்பிறப்பெடுத்து வாழத் தொடங்கிய காலத்துக்குப் பிறகு வந்த ஒவ்வொரு தலைமுறைப் பேயும் தனது பேய்க்காலத்தை முடித்துக்கொண்டு முக்திக்கோ வேறொரு பிறப்புக்கோ சென்றுகொண்டே இருந்தும் அது மட்டும் பேயாகவே தேங்கியிருந்தது. அவ்வப்போது வருத்தப்படும். யார் யாருக்கோ நற்கதி கிடைக்கிறது, தனக்கு ஒரு வழி திறக்கவில்லையே என்று அழும். ஆனால் காத்திருப்பது தவிர செய்ய ஒன்றுமில்லை.
பல்வேறு காலக்கட்டங்களில் சக பேயாக வசித்தவை அதற்குச் சில உபாயங்கள் சொல்லியிருக்கின்றன. யாருக்கும் தீங்கு நினையாது இருந்து பார். தவம் செய்து பார். முற்பிறவியின் பாவங்களை எண்ணிக் கணக்கிட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பரிகாரம் செய்து பார்.
Add Comment