பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தியதில் தொடங்கியது இந்த ஆண்டு. பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் முதல்வரின் கனவுத் திட்டமாக முன்னிறுத்தப்பட்டு இந்த ஆண்டு கோலாகலமாகச் செயல்படுத்தப்பட்டது. பலத்த வரவேற்பும் பாராட்டுதலும் கிடைத்தது. தினமலர் நாளிதழ் இதைப்பற்றி நிறைய உண்ட மாணவர்களால் கழிவறை நிரம்பியதாகச் செய்தி வெளியிட்டதை மொத்தத் தமிழ்நாடே எதிர்த்து நின்ற அளவுக்கு இல்லையெனினும் காலை உணவு தயாரிக்கத் தனியார் டெண்டர் கோரப்பட்டதற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. ஆசிரியர்களின் பணிச்சுமை கூடுவது பற்றியும் முனகல் கேட்டது. வருடம் முழுக்க பள்ளிக் கல்வித் துறை நெகட்டிவ் செய்திகளில் அடிபட்டது. பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம் என்ற அரசு அனுமதியை தன் வாயால் ஒருமுறை சொல்லி உறுதி செய்தார் கல்வி அமைச்சர். ஆண்டு முடிவதற்குள் மகளிர் உரிமைத் தொகை எனும் மைல் கல் திட்டமும் தொடங்கப்பட்டது. ஹைடெக் வசதிகளுடன் கூடிய தோழி தங்கும் விடுதிகள் திட்டமும் முற்போக்கான முன்னெடுப்பு.
சென்னையில் ஐம்பதாண்டுகளில் இல்லாத மழை பொழிந்தாலும் பல இடங்களில் ஒன்றிரண்டு நாள்களிலும் சில இடங்களில் ஐந்து நாள்களிலும் இயல்புநிலை திரும்பிச் சுமாரான சேதாரத்துடன் தப்பியது. ஆனால் தென் மாவட்டங்களில் பெய்த மழை அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயிரம் ஆண்டு காணாத மழை என்றனர். 35-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்டது. வீடு, வாசல், கால்நடைகள், கடைகள் உள்ளிட்ட வாழ்வாதார இழப்பு பல கோடிகள். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஹெக்டேருக்கு மேல் விளைநிலங்கள் பாதிப்பு. டவுனில் கடை வைத்திருந்த மக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இயல்பு நிலை திரும்பப் பல மாதங்கள் ஆகும் என்கிறார்கள்.
Add Comment