“வாயை மூடு“ என்று நம்மிடம் யாராவது சொன்னால் நமக்கு கோபம்தான் வரும். ஏனெனில் அது மனிதர்களிடமிருந்து வரும் சாதாரணக் கட்டளை வாக்கியம். ஆனால், அதனையே குருநாதர் பரமசிவேந்திரர், தனது சீடன் சிவராமகிருஷ்ணன் என்கிற சதாசிவப் பிரம்மேந்திரரிடம் சொன்னபோது, அந்தச் சீடனுக்கு ஞானம் வந்தது. ஏனெனில் அது குருவிடமிருந்து உபதேசமாக வந்த மந்திர வாக்கியம். ஒரு குருநாதரின் கடமை என்பது அதுதானே… சொல்லாலோ, செயலாலோ தன் சீடனைச் சரியான வழியில் கடைத்தேற்றுவது.
மதுரையில், 17-18-ஆம் நூற்றாண்டில், சோமநாத அவதானியார் – பார்வதி தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்தது. சிவராமகிருஷ்ணன் என்று பெயரிட்டனர். சிவராமகிருஷ்ணனும் தனது குருநாதர்கள் பரமசிவேந்திரர், வேங்கடேசர் ஆகியோரிடம் முறையாகப் பல சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்தார். இவரது தனித்திறமைகள் காரணமாக, மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகும் வாய்ப்பு சிவராமகிருஷ்ணனுக்கு வந்தது. இவர் வாதத்திறமையில் மிகச்சிறந்து விளங்கினாராம். எடுத்துக்கொண்ட விஷயம் எதுவானாலும், அதில் தனது வாதத்திறமையினால் எதிரே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தோற்கடித்து விடுவாராம். இப்படி வெற்றிகள் தொடர்ந்து கிடைத்ததனால், ஒருகட்டத்தில் சிவராமகிருஷ்ணன், தான் சொன்னதே சரி என்று விதண்டாவாதம் புரியத் தொடங்கி, அதிலும் வெற்றியடையத் தொடங்கினாராம். தன்னிடமிருக்கும் திறமையைச் சீடன் தவறாக பயன்படுத்துகிறான் என்பதை அறிந்த குருநாதர் பரமசிவேந்திரர் அவனை நல்வழிப்படுத்தத் திருவுள்ளம் கொண்டார். சீடனை வரச்சொல்லி ஆளனுப்பினார்.
Add Comment