22. விபூதி
அனுபூதி என்று முதலில் நினைத்தேன். உட்செவியில் ஒலிக்கும் குரலைக்கூட அதனோடு தொடர்புறுத்தித்தான் ஏந்தி எடுத்துக்கொள்வேன். உணர்வின் அடியாழத்துக்கும் அப்பால் இருந்து ஓங்கி ஒலிக்கிற குரல். அது எனக்கு மட்டும் கேட்பது. இன்னொருவருக்கல்ல. வேறு யாருக்குமல்ல. மந்திரங்களாக இதுவரை கேட்டது, முதல் முறை ஒரு கட்டளையாக வந்துதித்திருக்கிறது என்று எண்ணினேன். அது சர்சுதியின் குரல்தானா என்று அன்று உறுதி செய்துகொண்டுவிட முடிவு செய்தேன்.
நான் நினைத்தது பிழை. மனித குலத்தின் ஆதி அடையாளமான அறியாமையின் எளிய வெளிப்பாடுதான் அதுவென உணர்ந்தபோது சிறிது வெட்கமாக இருந்தது. அனுபூதியல்ல அது. விபூதி. உள்ளிருந்து உற்பத்தியானதல்ல. எங்கெங்கும் நிறைந்த பேரதிகாரத்தின் ஆணை. எந்த வல்லமை அனைத்தையும் கட்டி ஆள்கிறதோ, அதற்குள்ளிருந்து வந்த உத்தரவு. எதனுள் எல்லாம் ஒடுங்கியிருக்கின்றதோ, அதன் தீர்மானம். எது இல்லையென்ற பேச்சுக்கே இடமில்லையோ, அதன் சொல். அதன் குரல். எனக்கிட்ட உத்தரவின் மறு பகுதியை அது சர்சுதிக்கும் அளித்திருக்கும் என்பதில் அப்போது எனக்கு சந்தேகமே ஏற்படவில்லை. நான் நெருங்கி நின்ற கணத்தில் அவள் வா என்று சொன்னாள். இறங்கு என்று அது மீண்டும் உத்தரவிட்டது.
குனிந்து அவளைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டேன். புவி புரண்டு குடமுடைந்து தன் கதவின் தாழ் திறந்து முகமேந்திய பிரம்மம் உதித்து வருவதேபோல இறங்கிச் சிலிர்த்து அமிழ்ந்து எழுந்தேன். உடல் ஒரு பனிப்பாளம் உருகிச் சரிவது போல உருகி நதியென உருக்கொண்டு அவளுடன் கலந்து இல்லாமலானது. சிரம் குளிர்ந்தது. சிந்தை குளிர்ந்தது. மனம் கரைந்து வளி நிறைந்தது. என் மூச்சுக்காற்றில் அப்போதுவரை நான் உணர்ந்திராத நறுமணத்தை முதல் முதலில் உணர்ந்தேன். அந்த மணத்தின் நிறம் ஒரு கர்ணிகார புஷ்பத்தின் நிறத்தை நிகர்த்திருந்தது. அதன் நிறை தென்றலினும் அளவு குறைந்ததெனத் தோன்றியது. என் நாசியினின்று வெளிப்பட்ட மூச்சுக் காற்றை நான் சர்சுதியில் மீண்டும் அமிழ்ந்து அவளது நாசியில் செலுத்தினேன். அவள் தன் முடிவற்ற தேகமெங்கும் அதனை ஹரித்ரத்தினைப் போலப் பூசிச் சிலிர்த்தாள். கணப் பொழுதில் அவளது தோற்றமே ஹரித்ரம் பூசிப் பொலிந்ததைக் கண்ட அந்த ஒன்பது பேரும் திகைத்து நின்றார்கள்.
‘ஓ, குத்சனே! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்? இந்நதியின் நிறம் மாறுவதை நீ உணரவில்லையா? தயவுசெய்து எழுந்து வெளியே வந்துவிடு. இது பாவச் செயலென்று எங்களுக்குத் தோன்றுகிறது’ என்று அவர்கள் அலறினார்கள்.
Add Comment