81. புலப்படும் வெற்றிடம்
நான் உணர்ச்சிவசப்படக் கூடாது. நான் அழக்கூடாது. நான் பக்கச் சார்பெடுக்கக் கூடாது. தனியொரு ஜீவனின் சுக துக்கங்கள் என்னை அசைக்க இடம் தரலாகாது. எனக்கு நியாயமென்று ஒன்றில்லை. மகரிஷி பேசும் தருமம்தான் எனக்கும் இறை. ஒரு வித்தியாசமுண்டு. நான் மனிதப் பிறப்பெடுத்து, இறந்தபின் தவமிருந்து தெய்வமானவள். அவர் பிறக்கவுமில்லை, தெய்வமும் இல்லை. என்னதென்று இனம் காணவியலாத பிரம்மத்தைப் போல இன்னொரு துகள். பிரம்மம் உதிர்த்த துகள். ஒருவேளை அதன் பிரதியாகவே இருக்கலாம். எனக்குத் தெரியாது. தெய்வங்களும் பிரம்மத்தை அறிந்ததில்லை என்பதே உண்மை. அது எப்படியானாலும் இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதே எனக்கு நடுக்கம் தருகிறது. மகரிஷியின் உறுதிப்பாட்டில் கோடியில் ஒரு பங்கும் என்னிடம் இல்லை என்று தோன்றியது. அது நாணமளித்தது. என்னை முற்றிலும் கட்டுப்படுத்திக்கொண்டு மிகவும் நிதானத்துடன் ஆழ்ந்து சிந்தித்தேன். பிறகு சிந்தனையில் திரண்டதை முன்வைத்து தியானம் செய்தேன். நான் ஒன்றைச் செய்ய விரும்பினேன். அது சத்திய மீறல். ஆனால் அதனைச் செய்யாமல் காலமெல்லாம் அதையே எண்ணிக்கொண்டிருப்பதினும், செய்துவிட்டு அதற்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடலாமென்று தோன்றியது. ஒரு கணம் என்மீதும் அனைத்தின் மீதும் வெறுப்புணர்வு உண்டானது. அது என் ஒளியைச் சிதைத்தெறிந்தது. ஒளியிழந்த தெய்வமொன்றை தெய்வங்களின் உலகில் காண இயலாது. ஒளியிழந்த தெய்வமென்று ஒன்று இதுகாறும் இருந்ததாகச் சரித்திரமும் இல்லை. எனக்குப் புதிதாக ஒரு சரித்திரத்தைப் படைக்கிற எண்ணமெல்லாம் நிச்சயமாகக் கிடையாது. நிகழும் சரித்திரத்தின் இறுதிப் பிழையாக ஒன்றனைச் செய்துவிட முடிவு செய்தேன். அதன் விலை எனக்குத் தெரியும். நான் காமாயினி. தவமிருந்து வரம் பெற்று தெய்வமானவள். அத்தகுதியைத் துறந்து பைசாசமாக அலைய என் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு வாய் திறந்தேன்.
‘புத்ர!’ என்று முதல் முறையாக அவனை நோக்கிக் குரல் கொடுத்தேன்.
அவன் ருத்ர மேருவின் சிகரத்தில் ஒரு பெரிய பாறையின் மீது அமர்ந்து, கண்மூடித் தவத்தில் லயித்திருந்தான். அவனது சிந்தை முழுதும் அங்கீரச மகரிஷியின் மீதிருந்தது. என் குரல் அவனை எட்டவில்லை. எனவே மீண்டும் அழைத்தேன். அப்போதும் அவனது கவனம் சிதறவில்லை. திடுக்கிட்டுப் போனேன்.
ஒரு தெய்வமாக இருந்தும் என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இக்கணம் என் புதல்வனிடம் பேசிவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. என் ஸ்தானம் இல்லாமல் போகுமென்று தெரிந்தும் அதனைத் துறந்தாலும் பிழையில்லை என்று நினைத்தேன். ஆனால் மனிதனாக வாழ்ந்துகொண்டிருக்கும் குத்சன் ஒற்றைச் சிந்தையில் தன் உடலையும் உயிரையும் உணர்வையும் உணர்வற்ற நிலையையும் சேர்த்துக் குவித்து நிலைநிறுத்தியிருந்ததைக் கண்டேன். இது எப்படி, எப்படி என்று திகைத்துத் திகைத்துத் தணிந்துகொண்டிருந்தேன்.
மெல்ல இறங்கி வந்து அவனருகே அமர்ந்துகொண்டு மீண்டும் அழைத்தேன்.
Add Comment