84. பொருள்
நான் விருத்திரன். கிராத குலத்தைச் சேர்ந்த சார சஞ்சாரன். எனக்குக் கடவுள்களுடன் பரிச்சயம் கிடையாது. என் தங்கை தெய்வமான பின்பு வேறெந்த தெய்வத்தையும் நினைத்தது கிடையாது. எனக்கொரு நெருக்கடி உண்டாகுமானால் அவள் பார்த்துக்கொள்வாள் என்று நினைத்துக்கொள்வேன். ஏதோ ஒன்று நடக்கும். நெருக்கடிகளினின்று நான் வெளியே வருவேன். அதற்கு என் செயலே காரணமாக இருக்கலாம். வேறொருவரின் செயலாகவும் அது இருக்கலாம். ஆனால் என் நம்பிக்கை பொய்த்ததில்லை. நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தப்பித்திருக்கிறேன். எளிய வாழ்க்கை. சொன்னதைச் செய்யும் எளிய பணி. சேமித்து வைத்துப் பிறகு நினைத்துத் திளைப்பதற்குத் தோதாகச் சில தருணங்கள், சில சம்பவங்கள், சில மனிதர்கள், சில அனுபவங்கள். ஒரு சிறந்த சராசரியாக இருந்து முடித்துவிட்டுப் போய்விடுவேன் என்று எண்ணியிருந்தேன். இனி, உயிருடன் இருக்கும் நாளெல்லாம் என்னால் உறங்க முடியுமா என்று சந்தேகம் வந்திருக்கிறது.
அந்த பிராமணனின் தகுதி அல்லது தரிசனம் சார்ந்து எனக்குத் திகைப்பில்லை. முனி அவனைப் பற்றிப் பேசியவற்றிலேயே திகைத்து முடித்துத் தெளிந்துவிட்டிருந்தேன். அவன் யாராக இருந்தால் எனக்கென்ன என்றுதான் எப்போதும் தோன்றும். வலுக்கட்டாயமாக நினைத்துக்கொள்வதல்ல. அப்படித்தான் எனக்குப் பொதுவாகவே தோன்றும். எனக்கு என் ராஜன் அளித்த பணி என்னவோ அது ஒன்றுதான் பெரிது. அந்த பிராமணனைக் கண்டடைந்த பின்பும் நான் எண்ணியதைச் செய்ய முடியாதிருக்கிறதே என்பது மட்டும்தான் எனக்கு மீதமிருந்த ஒரே கவலையாக இருந்தது.
அவன் தடுப்பாட்டம் ஆடியிருந்தால் நான் வேறு உபாயம் தேடிச் சென்றிருப்பேன். அதில் சந்தேகமில்லை. ஆனால் ஒவ்வொரு தருணத்திலும் அவன் தன்னை எனக்கு ஒப்புக் கொடுத்தான். அதில் பாசாங்கில்லை. ஏமாற்றில்லை. பித்தலாட்டங்களுக்கு அணுவளவும் இடமில்லை. எனக்கு மிக நன்றாகத் தெரிந்தது. எந்த சரஸ்வதியை அவன் தாயாகக் கருதிக் கால் படக்கூடாதென்று வாழ்கிறானோ, அதில் மூழ்கடித்துத்தான் அவனைச் சாக வைக்க முடியும். ஆனால், அந்நதியை நோக்கி அவனை ஓரடிகூட நகர்த்த முடியவில்லை.
இப்படி நான் சொல்வது வினோதமாகத் தோன்றலாம். எனது இயலாமை என்று புரிந்துகொள்ளப்படலாம். அது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் என் முயற்சியில் பழுதில்லை. எப்படி எண்ணிப் பார்த்தாலும் அவன் ஒரு நடமாடும், பேசும் மூங்கில் கழி என்றுதான் திரும்பத் திரும்பத் தோன்றியது. எதற்காக அப்படியொரு பிறப்பு நேர வேண்டும் என்றும் தோன்றியது. அவனிடமே இதனைச் சொன்னபோது,
‘நான் பிறக்கவில்லையே’ என்று சொன்னான். ‘சரி, தோன்றினாயா’ என்று கேட்டபோது, ‘பிரம்மமே தோன்றாதது. மற்ற எதையும் அப்படிச் சொல்லத் தகாது’ என்றான்.
Add Comment