85. நியாயமும் தருமமும்
அவர்கள் நெடுநேரமாகக் காத்திருந்தார்கள். மகரிஷி இப்போது வந்துவிடுவார் என்று ஒவ்வொருவரும் திரும்பத் திரும்பத் தமக்குத் தாமே சொல்லிக்கொண்டார்கள். ஆசிரமத்திலிருந்து வெளியே வரும் சீடர்கள் ஒவ்வொருவரிடமும் ஓடோடிச் சென்று மீண்டும் மீண்டும் அவர் எப்போது வருவார், எப்போது வருவார் என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களும் சலிக்காமல், வந்துவிடுவார் வந்துவிடுவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
மிகவும் பொறுமையாக இந்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அங்கிருந்த பிராமணர்கள் நான் சிரிப்பதைக் கண்டு வெகுண்டெழக்கூடும் என்பதால் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தேன். உண்மையில் ஒரு நாழிகைப் பொழுதுக்கும் மேலாக அவர்களை கவனித்துக்கொண்டிருந்தாலும் அவர்கள் எது குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது எனக்கு விளங்கவேயில்லை.
அவர்கள் மொத்தம் ஒன்பது பேர் வந்திருந்தார்கள். அவர்களுடன் வித்ருவை ஆண்ட ராஜனின் சேனையில் பணி புரியும் வீரனொருவன் தனது பத்தினியுடன் வந்திருந்தான். அவர்கள் இருவரும் பிராமணர்களைவிட்டுச் சற்று விலகி நின்றிருந்தார்கள். பிராமணர்களும் அவர்கள் இருவரும் வரும்போது ஒன்றாகத்தான் வந்தார்கள். அதை நான் கண்டேன். ஆனால் வந்த பின்பு பிராமணர்கள் யாரும் அந்த வீரனைப் பார்த்துப் பேசவில்லை. அவனும் அவர்கள் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்தானே தவிர, பதில் சொல்லவில்லை. விவாதமாக அங்கே ஏதும் நிகழாததால் அவர்கள் பேசிக்கொள்வது எது குறித்து என்பது எனக்கு விளங்கவில்லை.
ரிஷி வரும்வரை ஆசிரமத்துக்குள் ஏதாவது ஒரு மரத்தடியினைத் தேர்ந்தெடுத்து அமரலாம் என்று நான் சொல்லிப் பார்த்தேன். அவர்கள் அதற்கு உடன்படவில்லை.
Add Comment