90. ஒரே ஒரு பிழை
நான் குத்சன். என்னைப் போன்றதொரு பாக்கியசாலியை இந்தப் பிருத்வி என்றென்றும் காணப் போவதில்லை. நான் தோல்விகளின் ஸ்தூலம். என்னைவிட இன்னொரு அபாக்கியசாலி பிரளயத்துக்குப் பிறகு உதிக்கவிருக்கும் இன்னொரு யுகத்திலும் இருக்க வாய்ப்பில்லை. நான் அடைந்தவை அநேகம். இழந்தவை அநேகம். கண்டவை அநேகம். காணாதவை அநேகம். அறிந்தவை அநேகம். அறியாதவை அநேகம். அனைத்துக்கும் சிகரம், உணர்ந்தவை சார்ந்தது. அதை அநேகமென்று சொல்லாதே என அங்கீரச மகரிஷி சொன்னார். நான் அவரை மதிக்கிறேன். நான் உணர்ந்தவை ஏழு. உணராதவையும் அவை மட்டும்தான்.
அங்கீரச மகரிஷியைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்ததெல்லாம் மிகச் சில சொற்கள் மட்டுமே. அவையும் அதர்வன் மூலம் கிடைக்கப்பெற்றவை. அவர், ரிஷியின் சிநேகிதரென்று நானறிவேன். அவனைப் போலவே தாய் தகப்பன் சேர்க்கையின்றிப் பிறந்தவர் என்பது தெரியும். ஆனால் அவனைப் போலப் பாறையின் குணம் கொண்டவரல்லர். தவிர, அங்கீரச மகரிஷிக்கு சிரிக்கத் தெரியும். துயரங்களின் தகிப்பை உணரத் தெரியும். என் கண்ணீர் அவருக்குப் புரியும். யாருடைய நியாயங்களையும் அவரால் புரிந்துகொள்ள முடியும். அவர் கிருஹஸ்தர். ஏழு பிள்ளைகளைப் பெற்றவரும்கூட. எழுவருமே ரிஷிகளானவர்கள். தேவை ஏற்பட்டால் தானும் தன் பிள்ளைகளுமாகத் தனித்தனியே தோன்றுவார். அல்லாத கட்டத்தில் எண்மரும் ஒருவராகி உதிப்பர். அது அற்புதமல்ல. அதிசயமும் அல்ல. அது அவரது அல்லது அவர்களது இயற்கை. அற்புதங்களும் அதிசயங்களும் இயற்கையின் சுபாவமென்றால் அவரும் அவர்களும் அதுவேயன்றி வேறல்ல.
‘ஆனால் நீ அறியாத இன்னொன்று உண்டு குத்சனே. என் ஸ்தூலம் இன்றைக்கானதல்ல. நான் அதர்வனுக்கு மிகவும் பிந்தையவன்’ என்று மகரிஷி சொன்னார். உடனே எனக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. பிறகு, அவர் அதர்வனைக் காட்டிலும் பிராயத்தில் இளையவர் என்பதைத்தான் அப்படிச் சொல்கிறாரென்று நினைத்தேன். அதனை அறிந்தவராக,
‘சரியாகப் புரிந்துகொள். அவன் என்னுடைய நண்பன். ஒரு வகையில் குருவும்கூட. ஆனால் நான் இன்னொரு காலக்கட்டத்தைச் சேர்ந்தவன்.’
‘தலைமுறையைக் குறிப்பிடுகிறீர்களா மகரிஷி?’
Add Comment