92. அறிந்தவை
அவன் திரண்டிருந்தானா, சிதறியிருந்தானா என்று அவ்வளவு எளிதாக யாரும் உணர்ந்தறிய இயலாது. ஆனால் வேறொன்றாகியிருந்தான் என்பதைக் கண்டதும் தெரிந்துகொள்ள முடியும். அவன் வந்து சில தினங்களே ஆகியிருந்தன என்றாலும் வித்ருவில் வசிக்கும் பிராமணர்கள் யாருக்கும் அவன் வேண்டாதவனாகியிருந்தான். பிராமணர்கள் நாள்தோறும் அவனைச் சபித்துக்கொண்டிருந்தார்கள் என்பதனாலேயே சத்திரியர்களும் வைசியர்களும் அவனைக் கண்டாலே எட்டடி நகர்ந்து நடக்கத் தொடங்கியிருந்தார்கள். அவனாகக் கூப்பிட்டு ஏதாவது கேட்டால் சூத்திரர்கள் பதிலளிப்பார்கள். ஆனால், கேட்டதற்கு பதில் என்பதற்கு அப்பால் அவர்களும் அவனுடன் நெருங்கி நான் கண்டதில்லை.
ஆனால் சாரன் இவை எதையும் எப்போதும் பொருட்படுத்தியதில்லை. அவனது சிந்தையில் ஒரே ஓர் எண்ணம் மட்டுமே இருந்தது. அச்செயல் நடந்தேறும் தருணத்துக்காக மட்டுமே அவன் காத்திருந்தான். விழித்திருக்கும் பொழுதெல்லாம் அதனைக் குறித்து மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தான். என்னோடு பேசும்போது தவிர்க்க முடியாமல் அவனுக்குக் குத்சனின் நினைவு வந்துவிடும். உடனே அவனது வெறுப்பின் நெடி விழிகளின் வழியே கசிந்து வெளியை நிறைக்கும். அப்போதெல்லாம் அவனது பேச்சு மொழியும் உருமாற்றம் கொள்ளும்.
என்னால் அவனைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் அப்படித்தான் இருப்பான். அவன் அப்படித்தான் இருந்தாக வேண்டும். கூடாதென்று யார் சொல்ல முடியும்? நிச்சயமாக நான் சொல்ல மாட்டேன். நான் அதர்வன். பிருத்வியில் புழங்கும் அனைத்து விதமான நியாயங்களுக்கும் அப்பால், அவற்றால் எட்டவியலாததொரு தர்மத் தருவின் அடியில் நான் அமர விதிக்கப்பட்டிருக்கிறேன். நான் மிக நன்றாக அறிவேன்; எக்காலத்திலும் தர்மமென்பது ஒரு பேசுபொருளாக மட்டுமே இருக்கும். அது ஒரு வாழ்க்கை முறையாகாது. சாரன் குறிப்பிட்டதைப் போல, என்னை நிகர்த்ததொரு பொருளுக்கு மட்டுமே அது வாழ்க்கை முறையாக இருக்கத் தக்கது. ஆனால் நியாயங்கள் நிலைக்கும். என் நியாயம். உன் நியாயம். அவன் நியாயம். அதன் நியாயம். அவர்களது நியாயங்கள். அனைவரின் நியாயங்கள்.
ஆனால் நியாயங்களின் உரிமையாளர்களுக்குத் தெரியாது. அவை நிலைகொள்வதெல்லாம் தர்மத்தின் நிழலின் மீது மட்டும்தான்.
Add Comment