நவம்பர் 28ஆம் தேதி மத்தியத் தகவல்தொடர்புத் துறை (DoT) மொபைல் ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், புதிதாக விற்கப்படும் அனைத்து மொபைல் ஃபோன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ என்ற அரசாங்கச் செயலியை நீக்க முடியாதபடி முன்னதாகவே நிறுவி (Pre-Installed Apps) இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது, மோசடி சிம் கார்டுகள் மற்றும் கைபேசித் திருட்டுகளைக் கட்டுப்படுத்துவது போன்றவையே இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கங்கள் என்று விளக்கம் தரப்பட்டிருந்தது.
ஒன்றிய அரசின் இந்த முடிவு, தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மத்திய அரசு மக்களை உளவு பார்க்க முயல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்நிலையில், சஞ்சார் சாத்தி செயலியை நீக்க முடியாதபடி வைத்திருக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. அந்தச் செயலி தேவையில்லை என மக்கள் கருதினால் நீக்கிவிடலாம் எனத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவின் முதல் மொபைல் ஃபோன் உரையாடல் 1995ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி, அப்போதைய தகவல்தொடர்புத் துறை அமைச்சர் சுக் ராம் மற்றும் மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசுவுக்கு இடையே நடந்தது. இன்று சுமார் 118 கோடிக்கும் அதிகமான மொபைல் ஃபோன் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. 85.5% இந்தியக் குடும்பங்களில் குறைந்தது ஒரு மொபைல் ஃபோன் உள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஸ்மார்ட்ஃபோன்கள்தான்.














Add Comment